இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கும் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தங்கர் பச்சான் பேசியதாவது:
‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 4 நாட்களில் முடிவடைந்துவிடும். எப்போதோ முடிந்திருக்க வேண்டியது, பாரதிராஜாவின் உடல்நிலை காரணமாக தாமதமானது. அவர் முன்பே வருகிறேன் என்று கூறினார். ஆனால், நன்றாக ஓய்வு எடுத்த பிறகு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்று நான் கூறிவிட்டேன்.
இதுவரை 10 படங்களை இயக்கியிருக்கிறேன். ஒளிப்பதிவுப் பணிகள் என்று இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 53 படங்களில் பணியாற்றியிருக்கிறேன். 10 படங்களின் கதைகளை எடுத்துக்கொண்டு போவேன். ஆனால், அது பல மாற்றங்கள் அடைந்து வேறு ஒரு படமாக மாறிவிடும். நினைப்பதை எடுக்கும் சூழல் இன்னும் இங்கு வரவில்லை.
இந்தப் படத்தில் அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தேன். அதற்கு காரணம், சிறிதும் செயற்கைத்தனம் இல்லாத, புனைவு இல்லாத, நம்பகத்தன்மை இல்லாத ஒரு காட்சி, ஒரு உரையாடல்கூட இருக்கக் கூடாது. ஓர் இயல்பான வாழ்க்கையைப் பார்த்த அனுபவம், படம் பார்ப்பவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
ஏனென்றால், திரைப்படக் கலையைக் கண்டுபிடித்து 110 ஆண்டுகள் கடந்து விட்டது. இருப்பினும், நாடகத் தன்மையுடைய சினிமா உருவாக்கி, உண்மைக்கு மாறான சினிமாக்கள் மக்களை திசை திருப்புகின்றன என்ற ஆதங்கம் எனக்குள் இருக்கிறது.
இப்படத்தைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 2006 ஆம் ஆண்டு இந்தக் கதை எழுதப்பட்டது. ஒவ்வொரு முறை முயற்சி செய்தும் படமாக்க வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அதற்கான தயாரிப்பாளரும், நடிகர்களும் அமையவில்லை.
எனக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் சிறு தானியத்தை மட்டும் கொண்ட உணவகம் திருச்சியைத் தவிர வேறு எங்கும் இல்லை. நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று நம் தொன்மம் மாறாமல் அதை இப்படத்தின் தயாரிப்பாளர் வீரசக்தி கொடுத்து வருகிறார் என்று கேள்விப்பட்டு, அங்கே சாப்பிடப் போகும்போது அவருடைய நட்பு எனக்கு கிடைத்தது. இந்தக் கதையை கேட்டவுடன் ‘நாம் படமாக்குவோம் என்று கூறினார்.
நான் அதை நம்பாமல், ‘பின் வாங்க மாட்டீர்களே?’ என்று கேட்டேன். ‘சினிமாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இந்தக் கதை நெகிழ்ச்சியாக இருக்கிறது. இது போன்ற படங்களுக்காகத்தான் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அது எடுக்காததால்தான் மற்ற படங்களைப் பார்க்கிறார்கள்’ என்றார்.
அதன் பிறகு ராமநாதன் என்ற பாத்திரத்திற்கு யாரைத் தேர்வுசெய்வது என்று யோசிக்கும்போது, பாரதிராஜாதான் பொருத்தமானவர் என்று முடிவு செய்துவிட்டேன். இவரைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாத்திரத்தை நடிக்க முடியாது. அவர் இல்லையென்றால் இந்த படமே எடுக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தேன். அவரிடம் கதையைக் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார்.
கோமகன் என்ற பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடிக்கிறார். இதுவரை நீங்கள் பார்க்காத கௌதம் மேனனை இப்படத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக ஒரு படத்தில் 5 காட்சிகள் உருக வைக்கும் படியாக இருந்தாலே அந்த படம் மாபெரும் வெற்றி பெற்ற படம். அப்படி இந்த படத்தில் 20 காட்சிகள் இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியிலும் மக்கள் ஒன்றி விடுவார்கள்.
அடுத்தது பெண் கதாபாத்திரத்திற்கு அதிதியை பாலனைத் தேர்ந்தெடுத்தோம். ஏனென்றால், இந்தக் கதாபாத்திரத்தை சாதாரணமாக யாரும் நடித்திட முடியாது. இலக்கியச் சிந்தனையும் அனுபவ முதிர்ச்சியும் இருந்தால்தான் இந்தப் பாத்திரத்தில் நடிக்க முடியும். அதிதி அதற்குப் பொருத்தமாக இருந்தார்.
முதல் முறையாக ஜிவி பிரகாஷுடன் இந்தப் படத்தில் பணியாற்றுகிறேன். அவருடைய இசை 80 வயது அனுபவம் வாய்ந்தது போல் இருக்கும். அவரிடம் பண்ணிசை, மெல்லிசை, ஹிந்துஸ்தானி, கர்நாடகா என்று அனைத்து இசைகளும் இருப்பதை நினைத்து ஆச்சரியமாக இருக்கும்.”