ப்ளு ஸ்டார் இசை வெளியீட்டு விழா.. அரங்கத்தை அதிர வைத்த கீர்த்தி பாண்டியன்!

keerthi pandian
keerthi pandian

ப்ளு ஸ்டார் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை கீர்த்தி பாண்டியன், ஆரோகணம் ஸ்டைலில் கால் மேல கல் போடு ராவண குலமே மேல ஏறும் காலம் வரும் ஏறு ரத்தினமே என்று பாடல் வரிகளை சுட்டிக்காட்டி அரங்கத்தை அதிரவைத்தார்.

நடிகர் அருண் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலரான நடிகர் அசோக் செல்வனை கரம்பிடித்தார். இருவரின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வந்த நிலையில், ஜோடியாக நடித்த படம் தான் ப்ளு ஸ்டார். இந்த படத்தின் உந்தன் கைவீசிடும் பாடல் மிகவும் பிரபலமானது.

இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் படக்குழுவினர் மற்றும் இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார். கதை பிடித்திருந்ததால் நான் நடிக்க சம்மதித்தேன். ஆனால், பா.ரஞ்சித் படத்தை தயாரிக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா? என்று கேட்கிறார்கள்.

அரசியல் பேசினால் என்ன தவறு?. நாம் உண்ணும் உணவு உடை என்று ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது. அதை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

எல்லாப் படங்களில் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பா.ரஞ்சித் பேசும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இன்று மிகமிக முக்கியமான நாள். இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு அவர்கள் பாடிய வரிகளின் படி, காலு மேல காலு போடு ராவணகுலமே என்று பாடத் தோன்றுகிறது என்று பேசினார். இந்த பாடலை கேட்டதும் அரங்கத்தில் ரசிகர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் அரங்கமே அதிர்ந்தது என்று சொல்லலாம்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com