‘ஹரிவராஸனம்’ பாடிய "தாஸேட்டன் " ஜேசுதாஸுக்கு வயது 83!

 கே.ஜே.ஜேசுதாஸ்
கே.ஜே.ஜேசுதாஸ்
Published on

பின்னணிப் பாடகராக, இசையமைப்பாளராக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் கே.ஜே.ஜேசுதாஸ். கானகந்தர்வன் என அனைவராலும் அழைக்கப்படும் ஜேசுதாஸ், செவ்வாய்க்கிழமை (ஜன. 10) தனது 83 வது பிறந்தநாளை கொண்டாடினார்.

தமது 60 ஆண்டு கால இசைப்பயணத்தில் கர்நடாக இசைப்பாடல்கள், ஆன்மீக பாடல்கள், திரைப்பட பாடல்கள் என 80,000-த்தும் மேலான பாடல்களை பாடியுள்ளார். இசையமைத்தும் உள்ளார்

கேரள மாநிலம், கொச்சியில் 1940 ஆம் ஆண்டு பிறந்த ஜசுதாஸ், 1961 ஆம் ஆண்டு இசை உலகில் நுழைந்தார். மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி மற்றும் ஓடியா மொழிகளிலும், அரபி, ஆங்கிலம், லத்தீன் மற்றும் ரஷிய மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். சபரிமலையில் சன்னிதானம் நடை சாத்தப்படும்போது இவர் பாடிய ஹரிவராஸனம் பாடல்தான் தினமும் ஒலிக்கிறது.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளையும் பெற்றுள்ளார். திரைப்பட பாடல்களுக்காக 8 தேசிய விருதுகளும், கேரள அரசின் 25 விருதுகள், தமிழகத்தில் 5 மாநில விருதுகள், ஆந்திரத்தில் ஐந்து முறை நந்தி விருதுகள் பெற்றவர்.

ஜேசுதாஸ் தற்போது அமெரிக்காவில் உள்ளதால் காணொலி வழியாக தமது 83 வது பிறந்தநாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

கொச்சியில் ஜேசுதாஸ் இசைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் விழாவில், மலையாள நடிகர் மம்முட்டி, சித்திக், மனோஜ் கே.ஜெயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மலையாள நடிகர் மோகன்லால், பின்னணிப் பாடகி சித்ரா, கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்ளிட்டோரும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஜேசுதாஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஜேசுதாஸ், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். ஆனால், அவர் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் அவரது குடும்பத்தினர் சார்பில் மூகாம்பிகை கோயிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த்து.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com