Interview: "அப்பாவை இன்னும் அதிகமாக கொண்டாடி இருக்க வேண்டும்!" - விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் உருக்கம்!
“அப்பா மறைந்து இரண்டாண்டுகள் முடிய உள்ளது. அப்பா இறந்த பின்பு பலர் அவரை பற்றி அதிகம் அறியப்படாத உயர்வான நல்ல விஷயங்களை நிறைய பேசுகிறார்கள். அப்பா வாழ்ந்த காலத்திலேயே அவரை பற்றி இதையெல்லாம் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...." என்கிறார் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்.
சண்முக பாண்டியன் ஹீரோ வாக நடித்துள்ள 'கொம்பு சீவி' திரைப்படம் வரும் டிசம்பர் 19 அன்று வெளிவர உள்ளது. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனர் பொன்ராம் இயக்கி உள்ளார்.
சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கொம்பு சீவி பட ரிலீசுக்காக காத்து கொண்டிருக்கும் சண்முக பாண்டியன் நம் கல்கி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல்...
அப்பாவின் நினைவு தினம் இன்னும் சில நாட்களில் வர உள்ளது. நீங்கள் ஹீரோவாக நடித்த படமும் ஓரிரு நாட்களில் ரிலீசாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அப்பாவை எப்படி நினைவில் கொள்கிறீர்கள்?
அப்பா மறைந்த இந்த இரண்டாண்டுகளில் அப்பாவின் ஆளுமை, ஈகை, என பல விஷயங்களை மீடியாக்களும் மக்களும் பேசி கொண்டாடுகிறார்கள். அப்பா வாழ்ந்த காலத்தில் அவர் இன்னும் அதிகமாக கொண்டாடப்பட்டிருக்கலாம் என்று சொல்ல தோன்றுகிறது.
இதற்கு பொது மக்கள் தான் காரணமா?
மக்கள் மட்டும் காரணமல்ல. அரசியல் கட்சிகள், ஊடகங்கள், சினிமா துறையினர் என பல துறை சார்ந்தவர்களும் அப்பா மறைந்த பின்பு தான் அவரை முழுமையாக கொண்டாடுவதாக தோன்றுகிறது.
அப்பாவை மிஸ் செய்வதாக எந்த தருணத்தில் உணர்கிறீர்கள்?
நான் வீட்டில் இருக்கும் போது அப்பா ஷூட்டிங் சென்றிருப்பதாக நினைப்பேன். நான் ஷூட்டிங் செல்லும் போது அப்பா வீட்டில் இருப்பதாக நினைத்து கொள்வேன். இங்கே அப்பா இல்லாத உணர்வு எங்கிருந்து வரும்?
கொம்பு சீவி படம் எதை பற்றி பேசுகிறது?
இந்த படத்தின் கதை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள கிராமங்களில் நடக்கிறது. ஒரு அணை கட்ட, அப்பகுதியில் உள்ள சில கிராமங்கள் தேவைப்படுகிறது. அதில் ஒரு கிராமத்தை சேர்ந்தவன் இந்த படத்தின் ஹீரோ பாண்டி (நான்). அந்த அணை கட்டும் போது வரும் பிரச்னைகளை இவன் எப்படி எதிர் கொள்கிறான் என்பதை இந்த கொம்பு சீவி சொல்கிறது.
இந்த படத்தின் ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்தது?
இங்கேயும் அப்பாவின் நினைவுகளை மக்கள் பகிர்ந்தது கொண்டார்கள். "தம்பி, இங்கேதான் கேப்டன் பிரபாகரன் ஷூட்டிங் எடுத்தாங்க. ரயிலில் அப்பா சண்டை போடும் சீன் இந்த இடத்துலதான் நடந்தது..." என கேப்டன் பிரபாகரன் படத்தை நினைவில் கொண்டு வந்து, இப்படத்தை அப்பா நடிப்பதை போன்ற உணர்வை கொண்டு வந்து விட்டார்கள்.
சரத்குமார் சார் இந்த படத்தில் உங்களுக்கு அப்பாவாக நடிக்கிறார் போல் தெரிகிறதே..?
உங்களுக்கு அப்படி தெரிந்தால் அப்படியே வைத்து கொள்ளுங்கள். சரத் சாரின் கேரக்டரை இப்போது சொல்ல முடியாது. சஸ்பென்ஸ். சரத் சார் அப்பாவுடன் இணைந்து பல படங்கள் நடித்தவர். தனக்கு விபத்து ஏற்பட்டு ஷூட்டிங் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில், தனக்காக குணமாகும் வரை காத்திருந்து அதன் பிறகு படப்பிடிப்பு தொடங்கியதை உட்பட பல்வேறு விஷயங்களை சரத் சார் பகிர்ந்து கொண்டார்.
அம்மா பிரேமலதா எப்படி இருக்கிறார்?
அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் பலரை இரும்பு பெண்மணி என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது அம்மாவை இரும்பு பெண்மணியாக பார்க்கிறேன். அப்பாவுக்கு பின்பு அவரின் பொறுப்புகளை தோளில் சுமந்து பல விஷயங்களை தைரியமாக எதிர்கொள்வதை பார்க்கிறேன். தொண்டர்கள் பலர் அம்மாவின் வழியாக அப்பாவை பார்க்கிறார்கள்.
அப்பா விஜயகாந்த் நடித்ததில் உங்களுக்கு பிடித்த படம் எது?
சத்ரியன்.

