விமர்சனம்: கூரன் - நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்லும் நாய்!
ரேட்டிங்(3.5 / 5)
நாய், மாடு, ஆடு இன்னும் பல விலங்குகள் சாலைகளில் செல்லும் வாகனங்களால் அடிபடுவதை பார்த்திருப்போம். இந்த விலங்குகள் எல்லாம் தனக்கு நீதி கேட்டு நீதிமன்ற படி ஏறினால் என்ன ஆகும் என்று சொல்லும் படம்தான் கூரன். கூரன் என்றால் கூர்மையான அறிவுள்ளவன் என்று பொருள். நிதின் வேமுபதி இப்படத்தை இயக்கி உள்ளார். எஸ். ஏ. சந்திரசேகேர், ஒய் ஜி மஹேந்திரன், பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஜென்சி என்ற நாய் கொடைகானலில் தனது குட்டியுடன் நடந்து செல்லும் போது, குடித்து விட்டு கார் ஓட்டும் ஒருவர், குட்டியின் மீது வாகனம் ஏற்றி விட்டு நிற்காமல் சென்று விடுகிறார். குட்டி சம்பவ இடத்திலேயே இறந்து விடுகிறது. இதனால் நீதி கேட்டு தாய் ஜென்சி காவல் நிலையம் செல்கிறது. காவல் நிலையத்தில் இது நாய்தானே என்று துரத்துகிறார்கள். வழக்கறிஞர் தர்மராஜை (எஸ். எ. சந்திரசேகர்) சுற்றி சுற்றி குரைத்து கொண்டே வருகிறது. நாய் தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறது என்று புரிந்து கொள்ளும் தர்மராஜ் நாயின் மொழியை (குரைப்பதை ) AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, இருக்கும் பிரச்னையை தெரிந்து கொண்டு குட்டியை கார் ஏற்றி கொன்ற நபரை கண்டு பிடித்து நீதிமன்றத்தின் கூண்டில் ஏற்றுகிறார். இந்த நாய்க்கு நீதி கிடைத்ததா? என்று விடை சொல்கிறது இந்த கூரன்.
தேர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த கன்றுக்கு நியாயம் கேட்டு சோழ மன்னனின் அரண்மனையின் ஆராய்ச்சி மணியை அடித்த தாய் பசுவின் நினைவுதான் இப்படம் பார்க்கும் போது வருகிறது. இப்படி எல்லாம் நடக்குமா? என்று சிந்திப்பதை விட இப்படி எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் என்று படம் பார்க்கும் போது யோசனை வருகிறது. நாயை சிறப்பாக நடிக்க வைத்ததற்கு டைரக்டர் நிதின் வேமுபதியையும் நாய் ட்ரெயினரையும் பாராட்டலாம். "உன் குழந்தையை கார் ஏற்றி கொன்றது இவர்தானா" என்று எதிர் கட்சி வக்கீல் கேட்கும் ஜென்சி தரும் ஒரு ரியாக்ஷன் கை தேர்ந்த நடிகர்கள் கூட தோற்றுபோய் விடுவார்கள் என்று சொல்ல தோன்றுகிறது.
எஸ். ஏ.சந்திரசேகர் தனது நீதிமன்ற வசனங்களால் ஆளுமை செய்கிறார். "மதுவால வரும் பணத்தை பற்றி யோசிக்கும் அரசு விழும் பிணத்தை பற்றி யோசிக்கல" என்று சொல்லும் வசனம் சிந்திக்க வைக்கிறது. நடிப்புக்கு, வயது ஒரு தடையல்ல என்று உணர்த்துகிறார் எண்பது வயது 'இளைஞர்' எஸ்.ஏ.சி.
ஒய். ஜி. மகேந்திரன், பாலாஜி சக்திவேல் இருவரையும் சிறப்பாக பயன் படுத்தி உள்ளார் இயக்குனர். சித்தார்த் விபினின் இசையும், தன்ராஜின் ஒளிப்பதிவும் நாயின் உணர்வுகளை கடத்துவத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. படத்தின் பல காட்சிகள் நாடக பாணியில் சென்றாலும், அன்றாடம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழக்கும் வாயில்லா ஜீவன்களை பற்றி பேசியதற்காக இப்படத்தை பாராட்டலாம். வாழும் உரிமை மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இருக்கிறது என்று சொல்கிறது இந்த கூரன்.