விமர்சனம்: கோழிப்பண்ணை செல்லதுரை - இது கொஞ்சம் பழைய கோழி!
ரேட்டிங்(2.5 / 5)
தென்மேற்கு பருவகாற்று போன்ற விருது பெற்ற படங்களை இயக்கிய சீனு ராமசாமி கோழிப்பண்ணை செல்லதுரை என்ற படத்தை இயக்கி உள்ளார். கனா காணு ம் காலங்கள் சீசன் 2ல் நடித்த ஏகன் ஹீரோவாக நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வசிக்கும் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். மனைவியின் தவறான பழக்கத்தால் மனைவியை கொலை செய்ய முயற்சிக்கிறார் கணவர். இவரிடம் இருந்து தப்பித்து செல்கிறார் மனைவி. இந்த குழப்பத்தில் இரு குழந்தைகளும் ஆதரவற்றவர்களாகிறார்கள். இவர்களின் பெரியப்பா அடைக்கலம் தருகிறார். சிறுவன் செல்லதுரை பெரியப்பாவின் கோழிபண்ணையில் வேலை செய்து தங்கையை படிக்க வைக்கிறான். பண்ணைக்கு பதில் பெரியப்பாவுடன் சேர்ந்து கோழிக்கடை வைத்து பிழைப்பு நடத்துகிறான். வளர்ந்து பெரியவனானதும் ஒரு நாள் பிரிந்து சென்ற தன் அம்மாவையும், அப்பாவையும் சந்திக்கிறான். மீண்டும் அம்மாவையும், அப்பாவையும் சேர்த்து கொண்டானா? தவறு செய்த தன் தாயை மன்னிதானா என்று சொல்கிறது 'கோழிப் பண்ணை செல்லதுரை'.
1999 - 2000 வது ஆண்டில் அப்போது வந்த திரைப்பாடல்களுடன் கதை தொடங்குகிறது. ஆண் பெண் நட்பில் உள்ள சிக்கல்களை சொல்வது போல படம் தொடங்குகிறது. ஒரு வித்தியாசமான படம் என்று நாம் நிமிர்ந்து உடகாரும் போது, 'நீங்க நினைக்கிற மாதிரி நான் இல்லை' என்பது போல படம் செல்கிறது.
அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் (கொஞ்சம் ஓவராக) தங்கையை காதலிப்பவனை அடிப்பது, 'இரண்டு கிட்னியும் பெயிலியர்,' திருந்தி வரும் அப்பா என 1980-90 களில் வரும் கதை போல மாந்தர்களையும், காட்சிகளையும் உருவாக்கி இருக்கிறார் டைரக்டர். காட்சிகள் வழியே படம் நகர்வதற்கு பதிலாக வசனங்கள் வழியே படம் நகர்கிறது. ஒரு கட்டத்தில் சிறிது வருடத்திற்க்கு முன்பு வந்த படத்திற்கு வந்து விட்டோமா என்று எண்ணத் தோன்றுகிறது. கோணங்கள், லைட்டிங் இதற்கெல்லாம் அதிகம் அலட்டி கொள்ளவில்லை ஒளிப்பதிவாளர். ரகுநந்தனின் பின்னணி இசை ரசிக்கும் படி உள்ளது.
இந்த படத்தில் நல்ல விஷயங்களும் உள்ளன. தென் மேற்கு பருவகாற்று படத்தில் விஜய் சேதுபதியை அடையாளம் காட்டியது போல இந்த படத்தில் ஏகனை அடையாளம் காட்டி உள்ளார் சீனு ராமசாமி. தாயால் தனக்கு ஏற்பட்ட களங்கம், தங்கை மீதான அன்பு என பல இடங்களில் சிறப்பாக நடித்துள்ளார். முயற்சி செய்தால் அடுத்த விஜய்சேதுபதியாக வர வாய்ப்புள்ளது. வாழ்த்துக்கள் தம்பி. தங்கையாக நடிப்பவரும் சிறப்பாக நடித்துள்ளார். பிரிந்து சென்ற தாயை மகன் மன்னித்து ஏற்றுக்கொள்வது என்ற கருத்துக்காக இந்த படத்தை பாராட்டலாம் என்றாலும், இந்த கோழிப் பண்ணை செல்லதுரை இன்னும் பிரகாசித்திருக்கலாம்.