சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலாவுக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு அபூர்வ வாய்ப்பாக அமைந்தது. இவர் கொடுத்த கவுண்டர் காமெடிகளுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதன் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு பண உதவி செய்தார். 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதுவரை மலை கிராம மக்களுக்கு 4 ஆம்புலன்ஸ் வழங்கிய பாலா, தற்போது 5வது ஆம்புலன்சை வழங்கியுள்ளார்.இந்த 5-வது ஆம்புலன்ஸ் தனக்கு மிகவும் ஸ்பெஷல் எனக் கூறிய பாலா, அதை வாணியம்பாடி அருகே உள்ள ஒரு மலைகிராம மக்களுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
சாலை வசதியே இல்லாத அந்த கிராமத்துக்கு தன்னிடம் காசு இருந்திருந்தால் ரோடே போட்டு கொடுத்திருப்பேன், ஆனால் அந்த அளவுக்கு பணமில்லாததால் ஆம்புலன்ஸ் மட்டும் வாங்கி கொடுத்துள்ளேன். இது அக்கிராம மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன் என பாலா கூறியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.