விமர்சனம்: குமார சம்பவம் - கத்தி இல்லை; ரத்தம் இல்லை... இப்படியும் ஒரு திரில்லர்!
ரேட்டிங்(3 / 5)
தற்போது வரும் பெரும்பான்மையான படங்களில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் கத்தி இல்லாமல், ரத்தம் சிந்தாமல் கொஞ்சம் நகைச்சுவை கலந்து 'குமார சம்பவம்' என்ற த்ரில்லர் படத்தை தந்துள்ளார் பாலாஜி வேணுகோபால்.
சினிமாவில் டைரக்டராக வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர் ஹீரோ குமரன். (குமரன் தங்கராஜன்) இவரது வீட்டில் வாடகைக்கு தங்கி இருப்பவர் சமூக போராளி வரதராஜன் (இளங்கோ குமரவேல்). ஒரு நாள் மர்மமான முறையில் வராதராஜன் இறந்து கிடக்கிறார். காவல் துறை பல்வேறு கட்டங்களாக விசாரணை செய்கிறது. வராதராஜன் எழுதிய புத்தகம் ஒன்றில் கொலையாளியை பற்றி துப்பு இருப்பாதாக நம்புகிறார் குமரன். காவல் துறையோ குமரன் தான் கொலை குற்றவாளி என்று சந்தேகம் கொள்கிறது. யார் கொலை செய்தது என்ற விசாரணையின் வழியே கதை செல்கிறது.
ஆக்ஷன் த்ரில்லர், கிரைம் த்ரில்லர், போல் நகைச்சுவை திரில்லராக தந்துள்ளார் பாலாஜி வேணுகோபால். கொலை பற்றிய விசாரணை காட்சிகள், போராளி வராதராஜன் வரும் காட்சிகள் என்று மாறி, மாறி திரைக்கதை செல்கிறது. இருந்தாலும் ஒரு சிறு குழப்பமும் இல்லாமல், பரபரப்புடன் காட்சிகளை வைத்துள்ளார் டைரக்டர்.
இந்த பரபரப்புக்கு கை கோர்கிறது ஜி.மோகனின் படதொகுப்பு. எமோஷனல் காட்சிகளும் உள்ளன. தாத்தாவாக வரும் ஜி.எம் குமார் நடிப்பில் நம் வீட்டு தாத்தாவை நினைவுபடுத்துகிறார். தாத்தாவுக்கும், பேரனுக்கும் நடக்கும் உரையாடல்கள் மிக யதார்த்தம். "நல்ல கதையெல்லாம் சொன்னா தூங்கிடுவாங்கப்பா" என்று சமகால சினிமாவை குறிப்பிட்டு ஜி.எம்.குமார் சொல்லும் போது தியேட்டரே கை தட்டுகிறது.
அனைவரும் நன்றாக நடித்திருந்தாலும் ஜி.எம் குமார், இளங்கோ குமரவேல் என இருவரின் நடிப்பில் முதிர்வும் பக்குவமும் தெரிகிறது. தொலைக்காட்சியிலிருந்து பெரிய திரைக்கு ஹீரோவாக வந்துள்ள குமரன் தங்கராஜன் தனக்கு தரப்பட்ட கேரக்டரை புரிந்து நடிப்பை தந்துள்ளார். இன்ஸ்பெக்டராக நடிப்பவர், சகோதரி மற்றும் அம்மாவாக நடிப்பாவர்கள் என அனைவருமே சரியான தேர்வு. ஒரு மாறுபட்ட திரைக்கதை பின்னணியில் திரில்லர் அனுபவம் பெற நினைபவர்களுக்கு 'குமார சம்பவம்' ஒரு சிறந்த அனுபவத்தை தரும்.