KUMARI (2022) - (மலையாளம்) - திரை விமர்சனம்

KUMARI (2022) - (மலையாளம்) - திரை விமர்சனம்
Published on

நாயகி அம்மா, அப்பா இல்லாத அனாதைப்பெண். ஒரு சகோதரனும், மாமாவும் மட்டும் உண்டு. பக்கத்து ஊர் தம்புரான் குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக்கொள்கிறார்கள். நம்ம ஊர் நாட்டாமை மாதிரி அந்த ஊரில் தம்புரான். மந்திரம் எல்லாம் தெரிந்தவர், ஊர் தலைவர் மாதிரி, அவருக்கு இரண்டு மகன்கள், முதல் மகனுக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இரண்டாவது மகனுக்குத்தான் நாயகியைக் கல்யாணம் கட்டிக்கொடுகிறார்கள்.

நாயகியின் கணவன் ஒரு விசித்திரமான கேரக்டர். யாருடனும் அதிகம் பேசுவதில்லை. ஏன் இப்படி பெக்கூலியர் கேரக்டரா இருக்கிறீர்கள் என நாயகி கேட்கும்போது சிறு வயதிலிருந்தே என்னை தனிமைப்படுத்தி வளர்த்து விட்டார்கள். அண்ணனுக்குத்தான் அதிக முக்கியத்துவம், என்னை யாரும் கண்டு கொள்வதில்லை என்கிறார். நாயகிக்கு அந்தக் குடும்பத்தில் சரியாக பொருந்திப்போக முடியவில்லை.

நாயகி கர்ப்பம் ஆகிறாள். இது நாயகியின் கணவனின் அண்ணன் மனைவிக்குப்பிடிக்கவில்லை. ஏன் எனில் ஆண் வாரிசு யாருக்கு அமைகிறதோ அவர்களுக்குத்தான் தம்பிரான் பதவியும் போய்ச்சேரும். தன் கணவனுக்குக்கிடைக்காத அந்த பதவியும் கவுரமும் கணவனின் தம்பிக்குக்கிடைப்பதை அவள் விரும்பவில்லை.

நாயகி திருமணம் ஆகி காரில் ஊருக்குக்கிளம்பும்போதே ஒரு  பாட்டி அவளை எச்சரித்திருந்தாள். அங்கே போக வேண்டாம், அது சபிக்கப்பட்ட பூமி என்கிறாள்.

நாயகி வாழ்க்கைப்பட்ட குடும்பத்தில் 12 தலைமுறைகளுக்கு முன் ஒரு சம்பவம் நடந்திருந்தது. தம்பிரான் குடும்பத்தைச்சார்ந்த ஒருவர் அவர்கள் வீட்டுக்குளத்தில் குளித்ததற்காக ஒரு மலைவாழ் சிறுவனைக்கொலை செய்து விடுகிறார். அந்த சிறுவன் இல்லிமலை சாத்தானுக்கு இஷ்டப்பட்டவன். அவன் இறந்ததும் சாத்தானுக்குக் கோபம் வந்து சபிக்கிறது. இதனால் தம்பிரான் உடல் நலம் குன்றுகிறார். அவர் உடல் முழுக்க கொப்புளங்கள். தன் முடிவுக்காலம் நெருங்கியதை உணர்ந்த தம்பிரான் அவர்கள் குலத்து சாத்தானை வேண்டுகிறார். என்னை குணப்படுத்து, என்ன காணிக்கை வேண்டுமானாலும் தருகிறேன் என்கிறார்.

உங்கள் குடும்ப ஆண் வாரிசை எனக்கு இரையாகத் தா என்கிறது சாத்தான். தன் சுயநலத்துக்காக அந்த தம்பிரான் தன் மகனை பலி கொடுக்கிறான்.

இது பரம்பரை பரம்பரையாகத் தொடர்கிறது. சாத்தானின் ஆசி பெற்றதால் அந்த தம்புரான் பதினைந்து தலை முறை தாண்டியும் இன்னும் உயிர் வாழ்கிறார்.

இப்போது நாயகியின் குழந்தை பலி கொடுக்கும் முறை. நாயகியின் கணவன் தனக்குக்கிடைக்க இருக்கும் தம்பிரான் பதவிக்காக குழந்தையை பலி கொடுக்கத்தயார் ஆகிறார்.

 நாயகி என்ன முடிவு எடுத்தாள் என்பதே  திரைக்கதை. 

நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி. 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலியாக, 'அர்ச்சனா 31 நாட் அவுட்' படத்தில் டீச்ச்ராக , 'அம்மு' படத்தில் குடும்பத்தலைவியாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியவருக்கு இந்தப்படத்திலும் நல்ல ரோல். 'மணிச்சித்திர தாழ்' படத்தில் ஷோபனா, 'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா ஆகியோருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் இந்தப்படத்திலும் இவருக்கு டைட்டில் ரோலாக வாய்த்திருக்கிறது. வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தி இருக்கிறார். ஆனந்தம், அதிர்ச்சி, பயம், குழப்பம் என பல உணர்வுகளை முகத்தில் அசால்ட்டாக கொண்டு வருகிறார்.

கணவராக ஷைனி டாம் சாக்கோ. 'இஸ்க்' (2018), எனும் மலையாளப் படத்தில் பிரமாதமான சைக்கோ கேரக்டரில் நடித்து கைதட்டல் வாங்கியவர். விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் தீவிரவாதியாக வந்தவர். இவர் அமைதியாக முன் பாதியில் இருந்து விட்டு ஆர்ப்பாட்டமாக பின் பாதியில் ஆர்ப்பரிக்கிறார். மன நலம் பாதிக்கப்பட்டவராக மாறி விட்டார் எனலாம்.

திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் நிர்மல் சகாதேவ். நாட்டில் இப்போதும் மூட நம்பிக்கை காரணமாக நரபலி கொடுக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தப்படம் மூட நம்பிக்கையை எதிர்க்கும் படமாக அல்லாமல் அதை எல்லாம் நம்பும் தொனியில் தான் எடுக்கப்பட்டுள்ளது.

ஓப்பனிங் ஷாட்டில் பாட்டி தன் பேத்திக்கு சாத்தானின் கதை சொல்லும் 13 நிமிடக்காட்சி உலகத்தரம், ஒளிப்பதிவில் ஹாலிவுட் படத்துக்கு சவால் விடுகிறது.

உயர் ஜாதி மக்கள், பிறபடுத்தப்பட்ட மக்கள் இருவருக்கிடையேயான சண்டை போல இதில் இரு வேறு தரப்பு சாத்தான்களின் போராக இருக்கும் என க்ளைமாக்ஸில் எதிர்பார்த்தால் க்ளைமாக்ஸ் மட்டும் ஏமாற்றம்.

ஆப்ரஹாம் ஜோசஃப் ஒளிப்பதிவில் மிகுந்த கவனம் கொண்டு காட்சிகளை படம் பிடித்து இருக்கிறார். ஜாக்ஸ் பேஜாய் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். 5 பாடல்களில் 3 இனிமை . ஸ்ரீஜித்தின் எடிட்டிங் கன கச்சிதம்.

நெட் ஃபிளிக்சில் காணக்கிடைக்கிறது. இது குடும்பத்துடன் பார்க்கத்தகுந்த ஃபேண்டசி த்ரில்லர் வகையைச்சேர்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com