
லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துடன் பிரபலமும் ஆனார். இந்த விளம்பரத்தில் கலர் கலராக உடை அணிந்து கொண்டு, நடிகை தமன்னா, ஹன்சிகா மோத்வானியுடன் நடனம் ஆடி அனைவரையும் அசர வைத்தார். எப்படிப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனக்கு பிடித்ததை செய்யும் துணிச்சல் லெஜெண்ட் சரவணனிடம் அதிகமாக உள்ளது. அவர் நடித்த விளம்பரம் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் வெளிவந்து பலவாறு ட்ரோல் செய்தபோதும் அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னுடைய கடையின் விளம்பரத்திற்கு இவரே மாடலாக நடித்து வந்தார்.
கடை விளம்பரத்தில் நடித்த லெஜண்ட் சரவணன் ஒரு படி மேலே சென்று தனது சொந்த படத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்தார். அதனை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர்கள் ஜெர்ரி & ஜெடி இயக்கத்தில் ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அவருக்கு ஜோடியாக ஊர்வசி ரவுடேலா நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சரவணன், தான் நடித்து வரும் புதிய திரைப்படம் பற்றிய ருசிகரத் தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் தான் ஒரு புதிய படத்தில் நடித்து வருவதாகவும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், த்ரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் நிறைந்து இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் இப்படம் இருக்கும் என்றும், வரும் தீபாவளி பண்டிகையின்போது உலகளவிலுள்ள திரையரங்குகளில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுவரை, பெயர் அறிவிக்கப்படாத இந்தப் புதிய படத்தில் லெஜண்ட் சரவணன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை பாயல் ராஜ்புத் நடிக்கிறார். எதிர்நீச்சல், கருடன் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஷாம், ஆண்ட்ரியா, பாகுபலி பிரபாகர், சந்தோஷ் பிரதாப், பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக எஸ்.வெங்கடேஷ், எடிட்டராக பிரதீப் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள்.