waheeda rehman
waheeda rehman

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வஹீதா ரஹ்மானுக்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது.. 70களின் வெற்றி நாயகி!

Published on

ந்திய திரை உலகில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் ‘தாதாசாகேப் பால்கே’ விருது இந்தாண்டு தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்தி நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

1938ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் வஹீதா ரஹ்மான். இவரின் தந்தை பிரிட்டிஷ் அரசாங்கத்தில் கலெக்டராக இருந்தார். மிக இளம் வயதிலேயே தன் சகோதரியுடன் பரதநாட்டியப் பயிற்சி எடுக்க ஆரம்பித்த வஹீதா ரஹ்மான் அப்போது இந்திய வைஸ்ராய் முன்பு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெளிச்சத்திற்கு வந்தார்.

வஹீதா ரஹ்மான் தன் திரைப்பட வாழ்க்கையை முதன் முதலில் தமிழில் தொடங்கினார். குறிப்பாக தமிழில் முதல் முறையாக வண்ணத் திரைப்படமாக வந்த அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில்தான் வஹீதா ரஹ்மான் நடன நடிகையாக நடித்தார். ஆனால், எம்ஜிஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம் வெளியாவதற்கு முன்பே, தெலுங்கில் வஹீதா ரஹ்மான் நடித்த ரோஜுலு மராயி என்ற படம் 1955ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு தான் 1956ம்ஆண்டு அலிபாபாவும் நாற்பது திருடர்களுடம் படம் வெளிவந்தது. இந்த படத்தில் சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்கள் படத்தில் பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

வஹீதா ரஹ்மானின் வசீகரத் தோற்றமும் அவரின் நடனத்தினல் பிரபல திரைப்பட இயக்குநர் குரு தத், மிகவும் ஈர்க்கப்பட்டார். இதனையடுத்து சிஐடி படத்தில் தேவ் ஆனந்துக்கு ஜோடியாக வஹீதாவை நடிக்க வைத்தார். இதற்குப் பிறகு, குரு தத் தனது பியாசா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். இந்தப் படத்தில் வஹீதாவின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

குரு தத்தின் வாழ்க்கையின் மிகவும் பேசப்பட்ட படமான காகஸ் கே பூலில், அவர் வஹீதா ரஹ்மானை முன்னணி கதாநாயகியாக தேர்வு செய்தார். குரு தத்துடன் இணைந்து சௌதவின் கா சந்த் மற்றும் காகஸ் கே பூல் ஆகிய படங்களில் இணைந்து நடித்தார். குருதத் தவிர, தேவ் ஆனந்துடன் பல வெற்றிப் படங்களையும் கொடுத்தார். சிஐடி, காலா பஜார், கைடு மற்றும் பிரேம் பூஜாரி போன்ற சூப்பர்ஹிட் படங்கள் இதில் அடங்கும். இது தவிர, திலீப் சாகேப்புடன் ராம் அவுர் ஷ்யாம், ஆத்மி போன்ற வெற்றிப் படங்களையும் செய்தார். இது மட்டுமின்றி, ஷோமேன் ராஜ் கபூருடன் அவர் நடித்த தீஸ்ரீ கசம் படமும் வெற்றி பெற்றது. 

அதன் பிறகு தெலுங்கு, தமிழ்,மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி அனைத்து மொழிகளிலும் கொடி கட்டிப்பறந்தார். ஹிந்தி திரையுலகில் நுழைந்த வஹீதா, ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். இவர் நடித்த ஹிந்தி படங்களுக்கு அடுத்தடுத்து நல்ல வரவேற்பு கிடைக்கவே 70-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தார்.  முன்னணி நடிகையாக இருக்கும் போதே நடிகர் ஷாஷி ரேகி என்கிற ஹிந்தி நடிகரை 1974 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்னர், பெங்களூரிலுள்ள பண்ணை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது கணவர் நோய்வாய்ப்பட்டு இருந்ததை அடுத்து, மும்பை பந்த்ராவிலுள்ள தனது கடற்கரை பங்களாவில் தற்போது வசித்து வருகிறார்.

பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேச விரும்பாதவர் வஹீதா ரஹ்மான். ஆனால், தனது நடிப்பை தொழிலில் தற்போதுவரை கவனம் செலுத்திவருகிறார். குறிப்பாக பாகுன் படத்தில் ஜெயா பச்சனின் அம்மாவாக நடித்தார். இதற்கு காரணம் இந்தப் படத்திற்குப் பிறகு அவருக்கு பல படங்களில் அம்மா வேடத்தில் மட்டுமே வாய்ப்புகள் வர ஆரம்பித்ததுதான். தொடர்ந்து திரிசூல், கபி கபி மஷால், நமக் ஹலால் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் வஹீதா. 1991 ஆம் ஆண்டு வெளியான லாம்ஹெய்ன் படத்திற்குப் பிறகு, வஹீதா சுமார் 12 ஆண்டுகள் படங்களில் இருந்து விலகி இருந்தார்.

ஆனால். 2009ம் ஆண்டு அபிஷேக் பச்சன், சோனம் கபூர் நடிப்பில் வெளியான டெல்லி 6 படத்தில் நடித்து தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் வெற்றி பெற்றார். தொடர்ந்து ரங் தே பசந்தி போன்ற படங்களில் பணியாற்றினார். அதேபோல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2ம் பாகத்தில் அவருக்கு அம்மா வேடத்தில் நடித்துள்ளார் வஹீதா.

தமிழ் சினிமாவில் சாவித்திரி, சரோஜா தேவி, பானுமதி, சௌகார் ஜானகி போன்ற புகழ்பெற்ற ஹீரோயின்கள் போல், பாலிவுட்டின் பல்துறை கதாநாயகிகளில் ஒருவராக கருதப்படுகிறார் வஹீதா ரஹ்மான். கலைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வஹீதா ரஹ்மானுக்கு 1972ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் 2011ம் ஆண்டு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது, மத்திய பிரதேச அரசின் மாநில விருது மற்றும் பிலிம்பேர் விருது என பல எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது 85 வயதாகும் வஹீதா ரஹ்மான் கலை துறையில் ஆற்றிய பங்கிற்காக இந்திய திரையுலகில் உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அனுரக் தாக்கூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com