
விஜய் நடித்திருக்கும் ’லியோ’திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பாடல் வெளியீட்டு விழாவிற்கு நேரு உள் விளையாட்டு அரங்கம் தயாராகிக் கொண்டு இருப்பதைப் போன்றும், லியோ படத் தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் இணை தயாரிப்பாளரும் விஜயின் மேலாளருமான ஜெகதீஷ் ஆகியோர் நேற்று நேரு உள்விளையாட்டரங்கிற்கு சென்று பணிகளை பார்வையிட்டதை போன்ற புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் பாடல் வெளியீட்டு விழாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், பாடல் வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கேட்டும் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில்கொண்டு பாடல் வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதாகவும், பலரும் நினைப்பது போல இது அரசியல் அழுத்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணத்திற்காகவோ ரத்து செய்யப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், வாரிசு என அனைத்து திரைப்படங்களின் பாடல் வெளியீட்டு விழாக்கள் பிரமாண்டமாக நடைபெற்றன. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் விஜய்யின் அனைத்து படங்களுக்கும் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வந்தது. விஜய்யின் அந்த குட்டி ஸ்டோரியை கேக்க ரசிகர்கள் ஓடோடி வருவார்கள். முதன் முறையாக விஜய் திரைப்படத்திற்கு பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்டில் ஏற்பட்ட குளறுபடி போன்று இந்த நிகழ்ச்சியிலும் கூட்டம் சேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.