லியோ திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்ட வாய்ப்பில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்திருக்கின்றன. அதே நேரம் படம் வெளி வருவதற்கு முன்பே தொடர் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பு ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 6000 தியேட்டர்களில் வெளியான லியோ 148.5 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு வெளியாகி முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறது. இயக்குனர் அட்லி, நடிகன் ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜவான் திரைப்படத்தின் வசூலை லியோ முறியடித்து இருக்கிறது.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தினுடைய தயாரிப்பாளர் லலித் குமார் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பது, நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. வெளியாக முன்பே மிகப் பெரும் அளவில் திரைப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது.
லியோ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வசூலை ஈட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் 1000 கோடி ரூபாய் வசூலை அடைய வாய்ப்பு இல்லை. ஏனென்றால் வட இந்தியாவில் படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லை. வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படம் திரையிடப்படவில்லை, மாறாக சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் மட்டுமே படம் வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு கேரளா போன்ற தென் மாநிலங்களில் படம் மிகப்பெரிய வசூலை பெற்று சாதனை படைக்கும் என்று தெரிவித்தார்.