
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சில இடங்களில் ரசிகர்கள் திரையரங்குகளுக்குள் ஒரே நேரத்தில் புகுந்ததால் சேதங்களும் ஏற்பட்டன. டிரெய்லரில் இடம்பெற்றுள்ள விஜயின் கெட்ட வார்த்தை கடும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், திரிஷா என பெரிய நடிகர்கள் பட்டாளமே லியோ படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கான முன்னோட்டத்தை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. 2 நிமிடங்கள் 44 நொடிகள் ஓடும் வகையிலான முன்னோட்டத்தில் தெறிக்கும் ரத்தக்காட்சிகளும், சண்டைக்காட்சிகளும் இடம்பிடித்துள்ளன.
இதனை திரையரங்குகளில் திரையிடவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னை ரோகிணி திரையரங்கில் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளை நிகழ்த்தினர். திரையரங்குக்குள் நுழைந்த ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. டிரெய்லர் ஓடும்போது உற்சாக மிகுதியில், இருக்கைகள் மீது ஏறி நின்றதாலும், குதித்ததாலும் 400க்கும் அதிகமான இருக்கைகள் உடைந்தன.
வழக்கமாக போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான கதையை அமைக்கும் லோகேஷ் கனகராஜ், இந்த படத்திலும் அதுபோன்றதொரு கதையை அமைத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்தில், குடும்பத்துடன் வசித்து வரும் விஜய், திரிஷாவுடன் ஏற்படும் வாக்குவாதத்தின்போது கோபத்தில் கெட்டவார்த்தை பேசுவது போன்ற காட்சியும் டிரெய்லரில் இடம்பிடித்துள்ளது. குடும்பமாக வருபவர்களையும், இளைஞர்களையும் அதிகமாக ஈர்க்கும் விஜய்யின் படத்தில் ஆபாச வசனம் இடம்பெற்றிருப்பது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
டிரெய்லரில் கெட்ட வார்த்தையை பயன்படுத்தியிருப்பது விஜயின் தரத்தை மிகவும் குறைத்துள்ளதாகவும், பெண்களை இழிவு செய்யும் வகையிலான வசனங்களை வைப்பதா என்றும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. முதல் படமான மாநகரம் படத்தில் கெட்ட வார்த்தை தவறில்லையா என்று கேள்வி எழுப்பும் வகையில் வசனம் வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தில் கமல்ஹாசன், மாஸ்டர் படத்தில் விஜயை கெட்ட வார்த்தைகள் பேச வைத்திருந்த நிலையில், மீண்டும் லியோ படத்தில் விஜயை ஆபாச வசனத்தை பேசவைத்திருப்பது முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
மாவட்ட வாரியாக மாணவர்களை அழைத்து, பாராட்டி பரிசளித்தபோது, பெரியாரையும், காமராஜரையும் படிக்கும்படியும், அட்வைஸ் சொன்ன அதே விஜய் திரையில் மட்டும் ஆபாச வசனம் பேசுவது தவறான முன்னுதாரணமாகிவிடாதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன.