சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் லியோ வெற்றி விழாவிற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கும் லியோ திரைப்படம் கடந்து வந்த பாதை மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. படம் வெளியிடப்படுவதற்கு முன்பே தொடர் சர்ச்சைகளில் சிக்கியது, படம் வெளியிடப்பட்ட பின்னரும் குறையாமல் சர்ச்சைகள் தொடர்ந்தன.
அதே நேரம் நடிகர் விஜய் தற்போது நடிப்பைக் கடந்து தனது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். இதற்காக விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வுகளில் நடிகர் விஜய்யும் அவப்போது கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தின் வழியாக மக்களை சந்தித்த முயற்சி செய்தார். ஆனால் காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதை அடுத்து அதற்கான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கக் கூடிய நிலையில் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திரைப்படத்தின் வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் ஒன்றாம் தேதி மாலை நிகழ்ச்சி நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினரிடம் படக்குழுவினர் அனுமதி கேட்டு கடிதம் அளித்தனர். இந்த நிலையில் காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளுடன் லியோ திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு அனுமதி வழங்கி உள்ளனர்.
மேலும் பட தயாரிப்பு நிறுவனத்திடம் காவல்துறையினர் குறித்த நேரத்தில் நிகழ்ச்சியை தொடங்கி, குறித்த நேரத்தில் முடித்து விட வேண்டும். அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய வேண்டும், 200 முதல் 300 காரர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்துள்ளனர்.