
தமிழ்த் திரையுலகில் காமெடி நடிகர்களைக் காட்டிலும், காமெடி நடிகைகள் குறைவு தான். இருப்பினும் தனது திறமையான நடிப்பால் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காமெடி நடிகை மனோரமா. தொடக்கத்தில் மேடை நாடகங்களில் நடித்த மனோரமாவுக்கு, பட வாய்ப்பை வழங்கியது கண்ணதாசன் தான். இவரது திரை வாழ்க்கை அற்புதமாக அமைந்தாலும், மண வாழ்க்கை துயரம் நிறைந்ததாகவே அமைந்தது. அதனால் தான் தற்கொலை எண்ணம் வந்தால் என்னை நினையுங்கள் என்று ஒருமுறை அழுத்தமாகச் சொல்லியிருந்தார் மனோரமா.
தமிழ் சினிமாவில் ஆச்சி என அழைக்கப்படும் மனோரமாவின் உண்மையான பெயர் கோபி சாந்தா. நாடக கம்பெனியில் வேலை பார்த்த போது, எஸ்.எம்.ராமநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரது திருமண வாழ்க்கை முழுதாக 2 ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே முறிந்து விட்டது. இவர்களுக்கு பூபதி என்ற மகன் பிறந்தான். ஜோசியத்தில் அதீத நம்பிக்கை கொண்ட ராமநாதன், மகன் பிறந்த 11வது நாளிலேயே மனோரமாவை விட்டுப் பிரிந்தார்.
கணவரின் பிரிவு, திருமண வாழ்வின் தொடக்கத்திலேயே மனோரமாவிற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. அதன்பிறகு மகனுக்காகவே தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார் மனோரமா. வாழ்க்கையில் அடிக்கு மேல் அடி, நம்பிக்கை துரோகங்கள் என இவர் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை.
வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தந்தையை விட்டுப் பிரிந்ததும் வீட்டு வேலைக்குச் சென்றார் மனோரமா. அங்கிருந்துதான் நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது. அதன்பின் இரண்டு படங்களில் நடித்தும் அப்படங்கள் வெளிவர முடியாத சூழல் உருவானது. பின்னர் கண்ணதாசன் இயக்கிய மாலையிட்ட மங்கை என்ற திரைப்படத்தில் காமெடி நடிகையாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.
கதாநாயகியாக நடித்தால் நீண்ட நாட்களுக்கு நிலைக்க முடியாது; காமெடி நடிகையாக நடித்தால் பல ஆண்டுகள் சினிமாவில் ஆதிக்கம் செலுத்த முடியும் என கண்ணதாசன் மனோரமாவிடம் கூறியிருக்கிறார். இதனை ஏற்றுக் கொண்டு திரைப்படத்தில் காமெடி நடிகையாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.
1960 முதல் 1969 வரையிலான காலகட்டத்தில் காமெடி நடிகர் நாகேஷ் உடன் மனோரமா இணைந்து நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் சோ ஆகியோருடனும் பல படங்களில் நடித்துப் பிரபலமானார். திரை வாழ்வில் 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்ததால் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றார் மனோரமா.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார் மனோரமா. ஒருவரது வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படுவது இயல்பு தான். இருப்பினும் அப்படிப்பட்ட தருணத்தில் மனம் தளராது, வாழ்க்கையில் முன்னேறுபவர்கள் ஒரு சிலரே. அதில் மிகவும் முக்கியமானவர் மனோரமா.
“வாழ்க்கையைக் கண்டு பயப்படும் சிலருக்கு தற்கொலை எண்ணம் வந்தால் என்னை நினைத்துப் பாருங்கள். எனது வாழ்க்கையை புரட்டிப் பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு தற்கொலை எண்ணம் நீங்கி விடும்” என ஒருமுறை மனோரமா தெரிவித்திருந்தார். உண்மையைச் சொல்வதென்றால் பல கஷ்டங்களை அனுபவித்தும், எந்நிலையிலும் தவறான முடிவை எடுக்காமல் வாழ்க்கையில் முன்னேறிய மனோரமாவின் வாழ்க்கைப் பயணம் கூட நமக்கு ஒரு பாடம் தான்.