லாக்கர்
லாக்கர்

விமர்சனம்: லாக்கர்!

லாக்கர் -உள்ளே என்ன இருக்கிறது? (3 / 5)

லாக்கர் -உள்ளே என்ன இருக்கிறது?  நூதனமான முறையில் பணத்தை கொள்ளையடிப்பது, தங்கம் கடத்துவது, பங்கு சந்தை மூலம் மக்களை மூளை சலவை செய்து பணம் பறிப்பது போன்ற சட்ட விரோத செயல்களை செய்யும் ஒரு இளைஞனின் (ஹீரோ ) வாழக்கையில் பெண் வந்தால் என்ன ஆகும் என்று சொல்லும் படம் லாக்கர்.                

ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் இணைந்து லாக்கரை இயக்கி இருக்கிறார்கள். விக்னேஷ் சண்முகம் ஹீரோவாக நடித்திருக்கிறார். நிரஞ்சனி  அசோகன் ஹீரோயினாக அறிமுகம் ஆகியுள்ளார். படத்தின் முதல் பாதி   ஹீரோவின்  சாகசாங்களை சொல்கிறது. இரண்டாவது பாதியில் திரைக்கதை முழுவதும் மாறி லாக்கரில் உள்ள தங்கத்தை திருடுதல் என்ற திசையை நோக்கி பயணிக்கிறது. நம்மை ரசிக்க வைப்பது இரண்டாவது பாதிதான்.

இரண்டாவது பாதி சஸ்பென்ஸ் திரில்லரை போல வேகமாக நகர்கிறது. தேவையற்ற காட்சிகள், வசனம் இல்லாமல் லாக்கர் என்ற விஷயத்தை நோக்கியே கதை செல்கிறது . நிரஞ்சனி அசோகன் ஒரு அறிமுக நாயகி என்று சொல்ல முடியாத அளவுக்கு நல்ல நடிப்பை தந்துள்ளார். வேறு வழி இல்லாமல்  காதலுக்கு துரோகம் செய்யும் போது, உணர்வு பூர்வமாக தவிக்கும் மாறுபட்ட நடிப்பை தந்துள்ளார்.

விக்னேஷ் சண்முகம் இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும், லாக்கர் படத்தில் முந்தய படங்களை விட சிறந்த நடிப்பை தந்துள் ளார். காதலின் பிரிவை சொல்லும் போது நாம் பார்க்கும் பல இளைஞர்களை நினைவில் கொண்டு வருகிறார். அறிமுக இசை அமைப்பாளர்  வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையில் வா பறப்போம் வா பாடல் மட்டும் ரசிக்கும் படி உள்ளது.                 

படத்தின் சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருக்கிறது. இருப்பினும் குறைந்த  பட்ஜெட்டில் ஒரு நல்ல திரைக்கதை அமைத்து நடிகர்களிடம் நல்ல நடிப்பை வாங்கி சுவாரசியமான படம் தந்ததற்க்கு    இரட்டை இயக்குனர்களை பாராட்டலாம். இந்த லாக்கரில்  த்ரிலர், நடிப்பு கதை என  நாம் ரசிக்கும் படியான விஷயங்கள் இருக்கிறது.               

logo
Kalki Online
kalkionline.com