
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்போதே படத்தின் விளம்பரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள் மற்றும் கதையில் உள்ள திருப்பங்கள் குறித்து அவர் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இந்தச் சூழலில், 'கூலி' படப்பிடிப்பின் போது ரஜினி என்ன செய்வார் என்பது பற்றி லோகேஷ் பேசியுள்ள தகவல், ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
'ஜெயிலர் 2' படத்திற்குப் பிறகு, ரஜினி தனது சுயசரிதைப் படத்தில் நடிக்க உள்ளார் என்று நீண்ட நாட்களாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கான கதையை ரஜினியே எழுதி வருவதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். 'கூலி' படத்தின் கடைசி இரண்டு ஷெட்யூல்களின் போது, ரஜினி தனது சுயசரிதையை எழுதுவதில் மிகவும் மும்முரமாக இருந்தாராம். அதாவது, படப்பிடிப்புக்கு இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ரஜினி தனது வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்து வந்திருக்கிறார்.
படப்பிடிப்பு இடைவேளைகளில், ரஜினி தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை லோகேஷிடம் நினைவு கூர்ந்து பகிர்ந்துகொள்வாராம். தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களை லோகேஷிடம் தவிர வேறு யாரிடமும் ரஜினி பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்பதையும் லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார். ரஜினி பகிர்ந்துகொண்ட அந்த விஷயங்கள் தனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை என்றும் லோகேஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஆகவே, ஒரு கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்த ரஜினியின் வாழ்க்கை வரலாறு, கண்டிப்பாக மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரஜினியின் திரைப் பயணத்தில் பல சவால்களையும், பிரச்சனைகளையும் கடந்துதான் அவர் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார்.
70 வயதைக் கடந்தும், இன்றும் ஒரு படத்தின் நாயகனாகத் தொடர்ந்து நடித்து வருவது சாதாரண விஷயமல்ல. அவர் இன்னும் பல வெற்றிகளைத் தொட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. லோகேஷ் வெளியிட்ட இந்தத் தகவல், ரஜினி ரசிகர்கள் மத்தியில் அவரது சுயசரிதைப் படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.