லொள்ளு சபா நடிகர் சேஷு காலமானார்... ரசிகர்கள் அதிர்ச்சி!

Lollu Sabha Seshu
Lollu Sabha Seshu

லொள்ளு சபா புகழ் நடிகர் சேஷு இன்று மருத்துவமனையிலேயே காலமானார்.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் லொள்ளு சபா. இந்த காமெடி நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதில் நடித்தவர்களும் சினிமாவில் பெரிய அளவில் கலக்கினார்கள். அப்படி இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சேஷு.

2002ஆம் ஆண்டு வெளியான தனுஷின் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், 2004-ம் சூப்பர் டூப்பர் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்த இவர், சன் டிவியின் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் நடித்திருந்தார்.

சின்னத்திரையில் நடித்துக்கொண்டே வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை தொடங்கிய சேஷூ, வீராப்பு, வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், A1, திரௌபதி, ஆண்டி இந்தியன், டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். லொள்ளு சபாவில் நடித்து காமேடியானாக சினிமாவில் அறிமுகமான சந்தானம் தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள நிலையில், அவர் நடிக்கும் படங்களில் சேஷு நடித்து வருகிறார்.

கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்து பிரபலமடைந்த சேஷூ, மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார். காமெடிக்கு பெயர் போன லொள்ளு சபா நிகழ்ச்சியில் தனது திறமையால் பட்டைய கிளப்பி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இவர் திடீரென உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com