
ஒவ்வொரு காலகட்டத்திலும் திரைத்துறையில் சில ஜோடிகள் பிரபலமாகப் பேசப்படுவார்கள் . கமல்_ஸ்ரீதேவி ,ரஜினி_ கௌதமி ,பிரபு-குஷ்பு இப்படிப் பல திரை ஜோடிகள் திரையில் ரசிகர்களைக் கவர்ந்தார்கள். இந்த வரிசையில் இந்த ஆண்டு திரையில் பேசப்படும் ஜோடிகளாக மாறிவருகிறார்கள் பரத் மற்றும் வாணி போஜன்.
இவர்கள் இருவரும் இணைந்து மிரள் என்ற படத்தில் கணவன் மனைவியாக நடித்தார்கள். ஓரளவு வரவேற்பைப் பெற்ற இப்படத்திற்குப் பின்பு இவர்கள் இருவரும் லவ் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள். ஆர்.பி பாலா இயக்கி உள்ள இந்த படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த சிலர் பரத்-வாணி போஜனின் நடிப்பு தற்கால கணவன் மனைவியைப் பார்ப்பது போல உள்ளது என்கிறார்கள். திருமணத்திற்கு முந்தைய காதலைச் சொல்லும் படங்கள் இங்கு ஏராளம் . திருமணத்திற்குப் பின்பு முப்பது வயதில் இருக்கும் காதல் பற்றிப் பேசிய படங்கள் மிகக் குறைவு. காதல் என்பது திருமணத்திற்கு முன்பு என்ற எண்ணமும் இதற்குக் காரணம்.
முப்பது வயதில் தேவைப்படும் காதலைப் பற்றி லவ் படம் பேசுகிறது என்கிறார் இயக்குநர் பாலா. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய பரத்." இது எனக்கு ஐம்பதாவது படம். பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் நான் நடித்த விடலை பருவத்துக் காதலை சொன்ன காதல் படம் எனக்குப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கண்டேன் காதலைப் படமும் பேசப்பட்டது.இப்போது என் ஐம்பதாவது படமான லவ் திரைப்படமும் எனக்குத் திருப்பு முனையாக அமையும் என நம்புகிறேன். நான் நடித்த படங்களில் எனக்கு உடன் நடிக்கச் சௌகரியமாக இருந்தது தமனா. அதன் பிறகு வாணி போஜன்தான் என்றார் நடிகர் பரத்.
தொடர்ந்து பேசிய பரத், பெரும்பான்மையான காட்சிகள் ஒரு அடுக்குமாடிக்குடியிருப்பில்தான் நடக்கிறது. இருந்தாலும் சுவாரசியமாக இருக்கும்" என்கிறார். பின்னர் பேசிய நடிகை வாணி போஜன், "நாங்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது போலக் காட்சி. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே பரத்தை அடித்து விட்டேன். பரத்தும் என்னை அடித்து விட்டார். கொடுத்த அடிக்கும், வாங்கிய அடிக்கும் கண்டிப்பாகப் பலன் இருக்கும் என நம்புகிறேன். படம் வெற்றி பெரும். என்னைப் பலர் அரசியலில் இறங்கப் போகிறீர்களா என்று கேட்கிறார்கள். எனக்கு இப்போதைக்கு அரசியல் எண்ணம் இல்லை" என்றார்.