தமிழில் வெளியாகி ஹிட்டான லப்பர் பந்து திரைப்படம் ஹிந்தி மொழியிலும் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்தான செய்தியும் வெளியாகியுள்ளது.
தமிழ்த் திரையுலகில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ஒன்று "லப்பர் பந்து". இந்தப் படம் 2024 செப்டம்பர் 20 அன்று வெளியானது. கிராமப்புற பின்னணியில், வீதி கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.
"லப்பர் பந்து" படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ளார். இளமையான கதைக்களம், யதார்த்தமான காட்சிகள், மற்றும் சுவாரஸ்யமான கிரிக்கெட் போட்டி காட்சிகள் ஆகியவை இந்தப் படத்தின் சிறப்பம்சங்கள். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் 'அட்டகத்தி' தினேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பாலா சரவணன், காளி வெங்கட் போன்றோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தை எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் ஏ. வெங்கடேஷ் ஆகியோர் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைப்பில் பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. "லப்பர் பந்து" திரைப்படம், நட்பு, போட்டி, காதல், மற்றும் கிராமப்புற வாழ்க்கை ஆகியவற்றின் கலவையாக அமைந்துள்ள ஒரு உணர்வுபூர்வமான கிரிக்கெட் திரைப்படம். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் சுமார் ரூ.44 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஓடிடியில் வெளியான பின்பும் கூட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இப்படியான நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. பொதுவாக தென்னிந்திய படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்தால், அக்ஷய் குமார்தான் நடிப்பார். ஆனால், இம்முறை வாய்ப்பே இல்லை. ஏனெனில், தயாரிப்பாளர் அப்படி.
ஆம்! லப்பர் பந்து ரீமேக்கை தயாரிக்கப்போவது ஷாருக்கானாம். இந்த படத்தில் அவர் ’கெத்து’ கதாப்பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அதேபோல், லப்பர் பந்து தமிழில் மாமியாராக நடித்த ஸ்வாசிகாதான், ஹிந்தி ரீமேக்கிலும் மாமியாராக நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.
இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.