Maharaja movie review in Tamil
Maharaja movie review in Tamil

விமர்சனம்: மகாராஜா - 'நடிப்பின் ராஜா'!

ரேட்டிங்(3.5 / 5)

"எனக்கு நடந்த மோசமான விஷயத்தை நினைச்சுக் கவலைப்பட மாட்டேன், கடந்து போய்க்கிட்டே இருப்பேன்" என பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பதினைந்து வயது சிறுமி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவனிடமே சொல்லும் காட்சி ‘மகாராஜா’ படத்தில் வரும்போது தியேட்டரே கை தட்டுகிறது.

சிறு சிறு வேடங்களில் நடித்து வில்லன், ஹீரோ, பாலிவுட் என வளர்ந்த விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாக வந்திருக்கிறது ‘மகாராஜா’. ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் மகாராஜாவை இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி சமீபத்தில் ஹீரோவாக நடித்த படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ‘மகாராஜா’ எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் அரங்கத்தில் நுழைந்து படம் தொடங்கி சில காட்சிகள் சென்றபின்பு விஜய் சேதுபதி தனது 50தாவது படத்தைச் சரியான டைரக்டரிடம்தான் ஒப்படைத்து இருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடிந்தது.

பசுத்தோல் போர்த்திய புலிபோல் வாழ்ந்துவரும் செல்வம் (அனுராக் காஷ்யப்) பல்வேறு கொலை, கொள்ளைகளைச் செய்து வருகிறார்.

ஒரு நாள் போலீஸிடம் வசம் சிக்கிக்கொள்ள தன்னை சிக்க வைத்தது சவர தொழிலாளி மகாராஜா (விஜய் சேதுபதி) தான் என்று தவறாக புரிந்துகொள்ளும் செல்வம், சிறை சென்று பதினைந்து ஆண்டுகள் கழித்து வந்து மகாராஜாவை கொலை செய்ய நினைக்கிறார்.

Maharaja movie review
Maharaja movie review

இந்த முயற்சியின்போது எதிர்பாராதவிதமாக மகாராஜாவின் மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார். தன் மகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தீர்த்துக் கட்ட முயற்சிக்கிறார் மகாராஜா.

படத்தின் முதல் பாதி பல்வேறு தொடர்பில்லாத காட்சிகளாக வந்து செல்கிறது. இரண்டாவது பாதி இந்தக் காட்சிகளின் காரணத்தை விளக்குவதாக பல்வேறு ட்விஸ்ட்களுடன் நகர்கிறது. உதாரணமாக விஜய் சேதுபதி போலீஸ் ஸ்டேஷனில் லட்சுமியை காணோம் என்று புகார் கொடுத்துவிட்டு அங்கேயே இரவு பகலாக போலீஸ்காரர்களிடம் வசவு வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் இருக்கும்போது ‘எதுக்கு இந்த மனுஷன் இப்படி இருக்காரு’ என்று நாம் நினைக்கும் நேரத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் டைரக்டர். இப்படி பல ட்விஸ்ட்கள் இரண்டாம் பாதியில் இருக்கு.

இதையும் படியுங்கள்:
இளையராஜாவை நேரில் சந்தித்து ஆசிபெற்ற பிரேம்ஜி - இந்து... வைரலாகும் போட்டோ!
Maharaja movie review in Tamil

ஒரு படத்தின் வெற்றிக்கு படத்தொகுப்பு என்று அழைக்கப்படும் எடிட்டிங் மிக முக்கியமானது என்பார்கள். எவ்வளவுதான் டைரக்டர் பிரமாதமாகப் படத்தை எடுத்திருந்தாலும், படத்தின் வெற்றி தோல்வி என்பது எடிட்டரின் மேஜையில்தான் முடிவாகிறது என்ற கருத்து உள்ளது. இந்தக் கருத்தை உண்மையாக்கும் விதமாக மிக சிறந்த படத்தொகுப்பு நுட்பங்களைக் கொண்ட படமாக வந்துள்ளது ‘மகா ராஜா’.

Maharaja movie review
Maharaja movie review

படம் நல்ல ஆக்ஷன் திரில்லர் அனுபத்தைத் தருகிறது. இந்த அனுபவம் கிடைப்பதில் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு, அனல் அரசு மாஸ்டரின் சண்டை பயிற்சி, அஜனீஷ் லோகநாதின் இசை, இந்த மூவரின் பங்களிப்பும் முக்கியமானது. வைரமுத்துவின் பாடல் வரிகளில் ஆழம் குறைவு.

நடிப்பில் தான் ஒரு ‘மகாராஜா’ என்பதை காட்சிக்குக் காட்சி நிரூபித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அடிபட்ட ஒரு காதில் கட்டு போட்டுக்கொண்டு தன் மகளுக்கான நீதியைத் தேடி அலையும்போதும், காவல் நிலையத்தில் அவமானப்படும்போதும் கமல், விக்ரமிற்கு அடுத்து நடிப்பில் விஜய் சேதுபதிதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

படத்தில் ஹீரோ அழுகின்றபோது படம் பார்க்கும் ரசிகர்களும் அழுவார்கள். ஆனால், ‘மகாராஜா’ படத்தில் வில்லனாக நடிக்கும் அனுராக் காஷ்யப் அழுகின்றபோது ரசிக்கர்கள் கண்களில் கண்ணீர் துளி எட்டிப் பார்த்தது. நடிப்பில் மிரட்டியும் அசத்தியும் இருக்கிறார் இந்த நடிப்பு ராட்சஷன்.

சிங்கம் புலியை வித்தியாசமாகக் காட்டிஇருக்கிறார் டைரக்டர். இவரின் கேரக்டரைச் சொல்ல முடியாது சஸ்பென்ஸ். மாறுப்பட்ட திரைக்கதையில் முழு உழைப்பையும் தந்து தனது ஐம்பதாவது படத்தை சிறந்த படமாக தந்துள்ளார் விஜய் சேதுபதி. வாழ்த்துகள் VJS!

logo
Kalki Online
kalkionline.com