'தென்றல் வந்து தீண்டும் போது' பாடல் இன்றும் பழமை மாறாமல் கேட்பவர்கள் மனதை வருடுகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் இளையராஜா மட்டுமே. இப்பாடலின் உருவாக்கம் மற்றும் ராகம் குறித்துப் பார்ப்போம்.
1995ம் ஆண்டு நாசரின் இயக்கத்தில் வெளியானத் திரைப்படம் ‘அவதாரம்’. அப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல்தான் இது. முதல்முறையாக நாசர் சினிமா துறையில் படம் இயக்குகிறேன் என்று இளையராஜாவிடம் கூறும்போது அவர் மிகவும் ஆச்சர்யமாகப் பார்த்தார். இளையராஜா 'சரி, படத்தை முடித்துவிட்டு பேசலாம்' என்று நாசரை அனுப்பி வைத்தார். அதன்பின்னர் படத்தை முழுவதுமாக முடித்துவிட்டு இளையராஜாவிடம் காண்பிக்கும்போது நாளை காலையே ஸ்டூடியோ வந்துவிடு என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். 'படத்தையே இப்போதுதான் இவர் பார்த்தார், எப்படி இசையமைப்பார்?' என்று கவலையில் ஆழ்ந்த நாசருக்கு அடுத்த நாள் காலை ஒரு ஆச்சர்யம் காத்துக்கொண்டிருந்தது. இளையராஜாவின் ஸ்டூடியோவில் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்த நாசர் முன் இளையராஜா எதையோ எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார்.
ஒன்றும் சொல்லாமல் எழுதியதால் என்னத்தான் செய்கிறார் என்று அறியாத நாசருக்கு அப்போது தெரியவில்லை அது அவர் படத்தின் பாடல்தான் என்று. அதிகாலை வேகவேகமாக எழுதிய அந்த எழுத்துகளில் பிறந்த பாடல்தான் 'தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல' . நாசர் ஒரு வேகமானப் பாடலைக் கேட்டார். அதற்கு ஏற்றவாரு பாடலின் ஆரம்பத்தில் வரும் ராகத்தை சரி செய்தப் பின்னர் தான் இப்போது நாம் கேட்கும் ராகம் தோன்றியது.
இந்த ராகத்தின் பெயர் ஜான்பூரி ராகம். இது வடநாட்டின் ஒரு கிளாசிக்கல் ராகமாகக் கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் மகாபாரதத்தில் கர்ணனைக் காதலித்த பெண்ணின் காதல் தோல்வியில் உருவான ராகம் என்று சொல்லப்படுகிறது. குஜராத் மற்றும் உத்தரப்பிதேசத்தில் அதிகம் காணப்படும் ராகம் இது.
முதன்முதலில் தமிழ் சினிமாவில் 1950ம் ஆண்டு 'கிருஷ்ண விஜயம்' படத்தில் தான் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 'சொன்னது நீதானா', 'இஞ்சி இடுப்பழகி', 'மயில் போல பொன்னு ஒன்னு', 'முன்பே வா என் அன்பே வா', 'பிரைத் தேடும் இரவிலே', 'இரவாக நீ', 'எனதுயிரே', 'வென்மதி வென்மதியே நில்லு', 'அனல் மேலே பனித்துளி' பாடல்கள் உட்பட பல பிரபலம் வாய்ந்த பாடல்களில் இந்த ராகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இப்பாடலை இளையராஜா மற்றும் ஜானாகி ஆகியோர் பாடியது குறிப்பிடத்தக்கது.