‘மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது’ சென்னை உயர் நீதிமன்றம்!

‘மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க முடியாது’ சென்னை உயர் நீதிமன்றம்!

தயநிதி ஸ்டாலின் நடித்து திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருக்கிறார். நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக இருந்த இந்தத் திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு ஒஎஸ்டி ஃபிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவில், ‘‘கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு ஆகியோர் நடிக்க, ‘ஏஞ்சல்’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி 80 சதவிகிதப் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. மீதம் 20 சதவிகித படப்பிடிப்பு மட்டும் நடத்த வேண்டிய சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்தப் படமே தனது கடைசி படம் என்று கூறி இருக்கிறார். ஒப்பந்தத்தின்படி இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்து வருவதால், ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். மேலும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்” என்ற அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. மேலும், ‘இதுகுறித்த விரிவான உத்தரவு மாலை இணைய தளத்தில் வெளியிடப்படும்’ எனவும் நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, மாமன்னன் திரைப்படம் நாளை குறிப்பிட்டபடி திரையரங்குகளில் வெளியாகும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com