
'வெயில்', 'அவன் இவன்' படங்களின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் ஜி.எம். குமார். இவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து அதனுடன் தான் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
திரைத் துறையில் இயக்குநர் மற்றும் நடிகராக பார்க்கப்படுபவர் ஜி.எம்.குமார். 1986ல் முதன்முதலாக பிரபு நடித்த 'அறுவடை நாள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, அதன்பின் 'பிக்பாக்கெட்', 'இரும்பு பூக்கள்', 'உருவம்' உட்பட படங்களை இயக்கியுள்ளார். அதேபோல், 1993ல் வெளியான 'கேப்டன் மகள்' படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி இன்றுவரை நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் 'வெயில்', 'அவன் இவன்' உட்பட படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, சிறந்த குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார். அதிலும் 'அவன் இவன்' படத்தில் இவர் நடித்திருந்த ஜமீன்தார் ஐனஸ் என்ற கதாபாத்திரத்தை வைத்துத்தான் கதையே நகரும். அதன்பின் 'அப்புச்சி கிராமம்', 'யட்சன்', 'தாரை தப்பட்டை', 'ஜருகண்டி', 'பொம்மை நாயகி' உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது கைவசம் தற்போது படங்களும் இருக்கின்றன.
இந்நிலையில் இவர், தான் உயிரோடு இருக்கும்போதே தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து, அதன் அருகே தானும் நின்றபடி இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்துடன் அவர் பதிவிட்டுள்ள வாசகமும் வித்தியாசமாக உள்ளது. அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் 'ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை🤣' என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.
ஜி.எம். குமாரின் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு, அதைப் பார்க்கும் ரசிகர்கள் அவரது குசும்புத்தனமான இந்த காரியத்தைப் நினைத்து, தங்களுடைய நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்தும் வருகின்றனர்.