மார்கழி திங்கள்
மார்கழி திங்கள்

மார்கழி திங்கள் விமர்சனம்!

மார்கழி திங்கள்- தலைப்பில் மட்டுமே கவித்துவம் (2 / 5)

"என் இனிய தமிழ் மக்களே நான்  உங்கள் பாரதி ராஜா  என்னை இயக்குனராக  ஏற்றுக்கொண்டது போலவே என் மகன் மனோஜை இயக்குனராக ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று பாரதிராஜா அவர்களின் வேண்டுகோளோடு தொடங்குகிறது மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளிவந்துள்ள மார்கழி திங்கள் திரைப்படம்.

எப்போதும் தனது படங்களில் படத்தை பற்றி  தனது குரலில் அறிமுகம் செய்யும் பாரதி ராஜா தனது மகன் இயக்கத்தில் வந்துள்ள இந்த படத்தில் தனது மகனை டைரக்டராக ஏற்றுக்கொள்ள ரசிகர்களிடம் விண்ணப்பம் வைத்துள்ளார். இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்து, கதை திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.         

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு ஊரில் உள்ள பள்ளியில் ஒரே வகுப்பில் படிப்பவர்கள் கவிதாவும், வினோத்தும். போட்டி போட்டுக் கொண்டு படிக்கும் இருவருக்கும் இடையே காதல் வருகிறது. கல்லூரி படிப்பை முடித்த பின்பு தான் திருமணம் அதுவரை இருவரும் சந்தித்து பேசக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறார் கவிதாவின் தாத்தா.

இருவரும் வெவ்வேறு  கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார்கள். இந்த படிக்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? எப்படி சமாளித்தார்கள் என்பதே கதை. சமீபத்தில் செய்திகளில் இடம் பெறும்  ஒரு சில காதல்  ஆணவ படுகொலைகளை மைய்யப்படுத்தி படம் தந்துள்ளார் மனோஜ்.

இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான இந்த படத்தில் ட்விஸ்ட்டும், கதையும் கடைசி கால் மணி நேரத்தில் மட்டுமே இருக்கின்றன. அதற்கு முந்தையை காட்சிகள் எல்லாம் செயற்கையாக புகுத்தப்பட்டது போல் உள்ளது. சுசீந்திரன் தனது சொந்த ஊரான ஒட்டஞ்சத்திரம் பகுதியில் கதை களத்தை அமைத்துள்ளார். களத்தை தேர்வு செய்தவர் கதை மாந்தார்களின் உணர்வுகளை முழுமைப்படுத்தாமல் விட்டு விட்டார்.

பள்ளி மாணவர்களை பற்றிய படத்தில் நகைச்சுவைக்கு நிறைய வாய்ப்பிருந்தும் நகைச்சுவை சிறிதும் இல்லை. படத்தின் முதல் காட்சி தொடங்கி பள்ளி யில் படிப்பை விட காதலே உள்ளது. கவிதாவாக நடிக்கும்  ரக்ஷினி காதல் காட்சிகளில் மிக அழகாக நடித்துள்ளார். இதற்கு நேர் மாறாக வினோத்தாக நடிக்கும் ஷ்யாம் செல்வன் உணர்வுகளை தருவதில் மிகவும் பின் தங்கி விடுகிறார். என்னதான் முதல் படமாக இருந்தாலும் கொடுத்த கேரக்டருக்கு ஒரளவு நியாயம் சேர்க்க வேண்டாமா?

பாரதி ராஜாவின் குரலில் சிறிது தளர்ச்சி தெரிந்தாலும் தாத்தாவாக நன்றாக நடித்துள்ளார்.                                              இது ஒரு காதல் படம் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது இளையராஜாவின் இசைதான். பாடல் காட்சிகளிலும், பின்னணி இசையிலும் ஒரு இசை  ராஜாங்கத்தை நடத்தி உள்ளார் ராஜா சார். டைட்டில் இசையில் நம்மை 1990களின் தொடக்கத்திற்க்கு அழைத்து சென்று விடுகிறார். 

தன்னை ஏற்றுக்கொண்டது போல மக்கள் தனது மகன் மனோஜை மக்கள் ஏற்று கொள்ளவேண்டும் என்று பாரதி ராஜா விரும்பினால்  மனோஜ் சிறந்த படங்களை தர வேண்டும். இது எதிர் காலத்தில் நடக்கும் என காத்திருப்போம்.                               

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com