
இந்திய சினிமா என்றாலே பாலிவுட் தான் என்றிருந்த காலமெல்லாம் தற்போது மலையேறி விட்டது. தற்போது தென்னிந்திய திரைப்படங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் நற்பெயரை பெற்று வருகின்றன. பான் இந்தியத் திரைப்படங்கள் பெரும்பாலும் தென்னிந்தியப் படங்களாகவே இருக்கின்றன. இருப்பினும் தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கான அங்கீகாரம் மட்டும் இன்னும் முழுதாக கிடைக்கவில்லை. இது தொடர்பாக நடிகை காஜல் அகர்வால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பு வரை மட்டுமே கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அதற்கு பிறகு நடிப்பதற்கான வாய்ப்புகள் கூட கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது கதாநாயகி வேடமாக இருக்காது. அன்று முதல் இன்று வரை மாற்றமே இல்லாமல் இந்த நிலை தான் தொடர்கிறது. இதனை மனதில் வைத்து தான் நடிகை காஜல் அகர்வால், தென்னிந்திய சினிமா மிகவும் மோசம் என குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியாவில் தென்னிந்திய சினிமா மட்டும் மிகவும் மோசமான மனநிலையில் இருக்கிறது. பாலிவுட்டில் திருமணம் ஆன பிறகும் கூட ஆலியா பட் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகைகள் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஆனால் தென்னிந்தியாவில் மட்டும் இதுபோன்று நடப்பதில்லை. திருமணமான பிறகு கதாநாயகிகளாக நடிக்கும் வாய்ப்பை யாரும் இங்கு கொடுப்பதில்லை. இதனை ஆணாதிக்கம் என்று சொல்வதா அல்லது பெண்களின் மீதான வன்மம் என்று சொல்வதா! என்னவாக இருப்பினும் தென்னிந்திய சினிமா மிகவும் மோசம் என்பது தான் உண்மை” என காஜல் அகர்வால் தெரிவித்தார்.
வயதான பிறகும் கூட தென்னிந்திய நடிகர்கள் மட்டும் கதாநாயகர்களாகவே நடிக்கின்றனர். ஆனால் நடிகைகளுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் காட்டப்படுகிறது என்று தெரியவில்லை. ஏற்கனவே நடிகை ஜோதிகாவும் தென்னிந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது என சமீபத்தில் விமர்சித்திருந்தார். இந்நிலையில் மற்றுமொரு நடிகை தென்னிந்திய சினிமாவை விமர்சித்திருப்பது சினிமா உலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.
மும்பையில் பிறந்த காஜல் அகர்வால், முதலில் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் பழனி என்ற படத்தில் பரத்துடன் இணைந்து நடித்தார். அதற்கு பின் சில படங்களில் நடித்திருந்தாலும், ராஜமௌலி இயக்கத்தில் வெளியான மாவீரன் திரைப்படம் தான் இவருக்கு முதல் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதன்பின் தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
நான் மகான் அல்ல, ஜில்லா, மாற்றான், மாரி, துப்பாக்கி மற்றும் மெர்சல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் காஜல் அகர்வால் நடித்துள்ளார். இவருடைய தங்கை நிஷா அகர்வால் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் தான் காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமா குறித்த தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.