

திரைத்துறையில் இரண்டு வகை உண்டு. MASS படம், CLASS படம். நிறைய இயக்குனர்கள் மாஸ் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துவார்கள். கிளாஸ் படங்களை கவனமாக ஒதுக்கி விடுவார்கள். இப்படி எதிலும் சிக்காமல் மக்கள் ரசிக்கும் பாணியில் படங்களை தந்து 'மக்கள் திலகம்' என்று பெயரெடுத்து இன்றும் அவர்கள் மனங்களில் வாழ்பவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.தேவர் பிலிம்ஸ் அவரை வைத்து 18 படங்களை தயாரித்துள்ளார்கள்.
ஒரு சிலப் படங்களைத் தவிர அனைத்தும் வெற்றிப்படங்களே! கதையை தேவர் பிலிம்ஸ் கதை இலாகா பார்த்துக் கொள்ளும். வசனம் ஆரூர்தாஸ், இசை கே.வி.மகாதேவன், இயக்கம் திருமுகம். இந்த கூட்டணி தந்த படங்களில் மாஸ், கிளாஸ் இரண்டும் சரிவிகிதத்தில் கலந்து இருக்கும். தேவையில்லாத பஞ்ச் டயலாக்கள், ஹீரோ வழிபாடு எதுவும் இருக்காது. குடும்பத்தோடு சென்று பார்க்கும் அளவுக்கு இருக்கும்.
திரையில் ரத்தம் தெரிக்காது. ரத்த சம்பந்த உறவுகள் பற்றிய காட்சிகள் இருக்கும். கே.சங்கர் அவர்கள் எம்.ஜி.ஆர். அவர்களை வைத்து நிறைய படங்களை இயக்கி உள்ளார். ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆர். அவர்களையும், சிவாஜி அவர்களையும் இயக்கி இருக்கிறார். அந்த படங்கள் பணத்தோட்டம், ஆலயமணி. இன்றைய பாணியில் சொன்னால் ஒன்று மாஸ், இன்னொன்று கிளாஸ். இரண்டும் வெவ்வேறு கதையமைப்பு கொண்டவை. இரண்டும் சூப்பர் ஹிட் படங்கள்.
இதே சங்கர் அவர்கள் 'பல்லாண்டு வாழ்க' என்ற கிளாஸிக் படத்தை எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தந்தார். எடுக்கப்பட்ட எல்லா எம்.ஜி.ஆர். படங்களும் மக்கள் ரசித்துப் பார்ப்பதற்கு ஏற்றது போல இருக்கும். வழக்கமான அவர் பாணியில் இருந்து விலகிப் போன படங்கள், பெற்றால்தான் பிள்ளையா, பல்லாண்டு வாழ்க, ஊருக்கு உழைப்பவன், நான் ஏன் பிறந்தேன் இவை மட்டுமே. இந்த படங்களில் மாஸ் படம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும்.
அவரின் 'இதயக்கனி' படம் சென்னை ஆல்பர்ட் தியட்டரில் 200 நாட்கள் கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. மாலை நேரக்காட்சியில். அவர் நம்மை விட்டுப் பிரிந்து 40 வருடங்கள் ஆகப் போகிறது. இன்றும் அவரின் படங்களுக்கு (Old Tamil Movies) இருக்கும் வரவேற்பு குறையவில்லை. வந்திருக்கும் படம் மாஸ் படமா? கிளாஸ் படமா? என்று யாரும் எதிர்பார்த்து வருவதில்லை.
சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாக ரசிக்கும்படி தேவையில்லாத ஹீரோ வழிபாடு, கிறுக்குத்தனமான பஞ்ச் டயலாக்குகள் இவை இல்லாமல் இருந்தால் படம் வெற்றி பெறும். ஆடியோ லாஞ்ச் அலப்பரைகள் அதில் தொலைக்காட்சி தொகுப்பாளிகள் அடிக்கும் கூத்து மக்களின் வெறுப்பை சம்பாதிக்கும் என்பது பலருக்கு புரிவதில்லை. இதைவிட காமெடி, இரண்டாம் நாளே இத்தனை கோடி வசூல், சக்சஸ் மீட் என்று விளம்பரப்படுத்துவது.
படங்களை தொடங்கும் முன்பு எம்.ஜி.ஆர். பார்முலா பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வெற்றியின் ரகசியம் புரியும். மாஸ், கிளாஸ் பிரிவுகள் காணாமல் போகும். எப்போதும் கேங்க்ஸ்டர் கதையை வைத்துக்கொண்டு 300 கோடி, 500 கோடி பட்ஜெட் என்று சொல்லி தயாரிப்பாளரை தெருவில் நிறுத்தும் சில இயக்குனர்களுக்காக,
'கண் போன போக்கிலே கால் போகலாமா...கால் போன போக்கிலே மனம் போகலாமா..' - எம்.ஜி.ஆர். அவர்கள் பாடிய பாடலை சமர்ப்பிக்கலாம்.