Mazhai Pidikatha Manithan Review
Mazhai Pidikatha Manithan Review

விமர்சனம்: 'மழை பிடிக்காத மனிதன்'- டைட்டிலில் புதுமை; கதையில்...?

Published on
ரேட்டிங்(2.5 / 5)

ஒரு படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை அனைத்தையும் முடிவு செய்வது டைரக்டர்தான். டைரக்டருக்கு தெரியாமல் ஒரு சிங்கிள் ஷாட் கூட வராது என்பார்கள். ஆனால் கடந்த வெள்ளியன்று விஜய் ஆன்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்தில் இடம் பெறும் முதல் ஒரு நிமிட காட்சி தனக்கு தெரியாமல் சேர்க்கப்பட்டுள்ளது; இதனால் படத்தின் மீதான சுவாரசியம் குறைந்து விட்டது என இப்படத்தின் டைரக்டர் விஜய் மில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சரி கதைக்குள் போவாம். கதை என்ன கதை? பல படங்களில் பார்த்த அதே கதைதான். சலீம் படத்தில் அமைச்சரின் மகனை கொன்று விட்ட சலீமை அமைச்சர் பழி வாங்க முயற்சிப்பதாக கதை தொடங்குகிறது. அமைச்சர் ஒரு மழை நாளில் சலீமின் மனைவியை கொன்று விடுகிறார். உளவு பிரிவு அதிகாரி, சலீம் உயிரோடு இருப்பதை மறைத்து அந்தமானில் தங்க வைக்கிறார். அங்கே சலீமிற்கு நண்பனும் காதலியும் கிடைக்கிறார்கள். இவர்களுக்கு பிரச்னை வரும் போது களத்தில் சலீம் குதிக்க, லோக்கல் தாதாவின் பகைக்கு ஆளாகிறார். அதன் பிறகு வழக்கம் போல டிஷ்யூம் டிஷ்யூம் தான். இறுதியில் சலீம் உயிருடன் இருப்பது தெரிய சலீமை கொன்று விட உத்தரவிடுகிறார் உளவுத்துறை மேலதிகாரி. 

கோலி சோடா போன்ற சமூக அக்கறை கொண்ட சிறந்த படங்களை தந்தவர் விஜய் மில்டன். ஆனால் விஜய் மில்டனின் சாயலில் துளி கூட இல்லாமல் வந்துள்ளது  மழை பிடிக்காத மனிதன். அமைதியான ஹீரோ தட்டி கேட்பது, வசனத்தை மெதுவாக பேசும் விஜய் ஆண்டனி, சென்டிமென்ட், காதல், கதை நகரும் விதம்  என இது முழுக்க முழுக்க விஜய் ஆண்டனி இதற்கு முன் நடித்த பல படங்களின் சாயலிலேயே வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இது விஜய்  மில்டன் இயக்கிய  படமா? அல்லது விஜய் ஆண்டனி இயக்கிய படமா என சந்தேகம் வந்துவிடுகிறது. அமைதியாக சோகமாக வருவது, ஒரு இடத்தில் பொங்கி எழுந்து அடிப்பது என முந்தைய படங்களை போலவே இந்த படத்திலும் நடித்துள்ளார் நண்பனாக வரும் பிரித்வி அம்பார். வில்லன் தனஞ்ஜெயா கர்வம் பிடித்த தாதாவாக மனதில் நிற்கிறார். ஹீரோயின் மேகா ஆகாஷ் வந்து போகிறார். 

இதையும் படியுங்கள்:
Target: கொரியன் திரைப்படம் பார்த்தாச்சா? இல்லையா? அச்சச்சோ மிஸ் பண்ணிடாதீங்க!
Mazhai Pidikatha Manithan Review

அந்தமானை அழகாக காட்சிப்படுத்திய விதத்திலும், மாறுபட்ட கேமரா கோணங்களிலும் ஒளிப்பதிவாளராக விஜய் மில்டன் ஜொலிக்கிறார். மழை பிடிக்காத மனிதன் என்ற கவித்துவமான தலைப்புக்கு எந்த வித காரணமும் சரியாக சொல்லப்படவில்லை. படத்தின் பின்னணி இசையும் கை கொடுக்கவில்லை. அடையாளத்தை மறைத்து வாழும் ஹீரோ என்ற பழைய கதையில் எந்த வித புதுமையும் செய்யாததால்  மழை பிடிக்காத மனிதனை நம்மால் ரசிக்க முடியவில்லை.

'அறிவுரையால் திருந்தும் வில்லன்' என்ற எம்.ஜி.ஆர் காலத்திய ஸ்டைல் கொட்டாவி வர வைக்கிறது. டைட்டிலில் வித்தியாசம் காட்ட முயற்சிக்கும் விஜய் ஆண்டனி படத்தின் கதையில் வித்தியாசம் காட்ட முயற்சித்தால் சிறப்பாக இருக்கும். 

logo
Kalki Online
kalkionline.com