Actor chiranjeevi
Actor chiranjeevi

'மெகா ஸ்டார்' நடிகர் சிரஞ்சீவிக்கு இங்கிலாந்தில் உயரிய விருது - இந்திய நடிகருக்கு கிடைத்த கௌரவம்!

சமுதாயத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்காக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது.
Published on

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிரஞ்சீவி இதுவரை 156 படங்களில் நடித்து இருக்கிறார். இவர் 537 பாடல்களில் 24 ஆயிரம் ஸ்டெப்புகளுடன் நடனம் ஆடியதற்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். கலைத்துறையில் அவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்தது. தற்போது விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு ரசிகர்களால் ‘மெகா ஸ்டார்’ என்று அழைக்கப்படும் இவர், இந்திய சினிமா வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் 1978-ல் நடிகராக சினிமா உலகில் அறிமுகமானலும், ஆரம்பத்தில் துணை நடிகர் மற்றும் வில்லனாக நடித்து வந்தார்.

இந்நிலையில் 1983-ம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் சிரஞ்சீவிக்கு திருப்புமுனையாக அமைந்து, அதிக வசூல் செய்த தெலுங்கு திரைப்படமாக மாறியது மட்டுமில்லாமல், அவரை தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராகவும் நிலைநிறுத்தியது. 1980 முதல் 1990ம் ஆண்டுகளின் சிரஞ்சீவி நடித்த அனைத்து படங்களுமே அதிக வசூல் செய்த நிலையில் தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகராக மாறினார்.

அதுமட்டுமின்றி 1992-ம் ஆண்டு வெளியான 'ஆபத்பந்தவுடு' படத்தில் நடித்ததற்காக, சிரஞ்சீவி ரூ.1.25 கோடி சம்பளமாக பெற்றார், இது அந்த நேரத்தில் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும், ஒரு படத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் பெற்றார்.

இவர் 1998 அக்டோபர் 2-ம் தேதி, ‘சிரஞ்சீவி அறக்கட்டளை’யை நிறுவினார். இந்த அறக்கட்டளை இரத்த வங்கி மற்றும் கண் வங்கியை இயக்குகிறது மற்றும் இரத்த தானம் மற்றும் கண் தானத்தை ஊக்குவிக்கிறது. இந்த அறக்கட்டளைகள் மூலம் கார்னியா மாற்று அறுவை சிகிச்சை மூலம் 9,000 பேருக்கு பார்வையை மீட்டெடுத்தல், சேகரிக்கப்பட்ட இரத்தத்தில் 70% ஏழைகளுக்கு இலவசமாக வழங்குதல், இலவச புற்றுநோய் முகாம்களை நடத்துதல், சினிமா துறையினருக்கான இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம்களை நடத்துதல் போன்ற பல்வேறு சேவைகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்:
கின்னஸ் சாதனைப் படைத்த சிரஞ்சீவி!
Actor chiranjeevi

அதுமட்டுமின்றி 2002 முதல் 2006 வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக ஆந்திரப் பிரதேச அரசிடமிருந்து ‘சிறந்த தன்னார்வ இரத்த வங்கி விருது’ உட்பட பல விருது மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

இதற்கிடையில், சமுதாயத்திற்கு சிறப்பாக பங்காற்றியதற்காக, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிரஞ்சீவிக்கு இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவருக்கு 'பிரிட்ஜ் இந்தியா' அமைப்பு பொது சேவையில் சிறந்து விளங்குவதற்கான ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை’ வழங்கி கவுரவிக்க உள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் சிரஞ்சீவி ஆற்றி வரும் சேவைகளை கவுரவிக்கும் வகையில் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விருது சினிமா மட்டுமல்லாமல், பொது சேவை, கலாசார தலைமைத்துவம் ஆகியவற்றுக்காகவும் வழங்கப்படுகிறது. இதற்காக அவர் நேற்று இங்கிலாந்து சென்றடைந்தார். அப்போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு சிரஞ்சீவிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், இந்திய நடிகர் ஒருவருக்கு கிடைக்கும் கௌரவம் அவருக்கு மட்டுமல்ல, நம் நாட்டிற்கு கிடைக்கும் கௌரவம் என்பதால் சினிமா உலகமும், ரசிகர்களும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் சிரஞ்சீவிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது மகன் ராம் சரண் தந்தையை போலவே தெலுங்கு படஉலகில் முன்னனி நடிகராக உள்ளார்.

இதையும் படியுங்கள்:
நடிகர் சிரஞ்சீவி விஷயத்தில் பொய்த்துப்போன அப்துல் கலாமின் அறிவுரை!
Actor chiranjeevi
logo
Kalki Online
kalkionline.com