ரகுவரனின் 15 ஆவது நினைவு தினத்தை ஒட்டி ரோகிணி எழுதிய நினைவுக் குறிப்பு!

ரகுவரனின் 15 ஆவது நினைவு தினத்தை ஒட்டி ரோகிணி எழுதிய நினைவுக் குறிப்பு!

நடிகர் ரகுவரன் அவர்களின் 15வது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. ரகுவரனின் முன்னாள் மனைவியான நடிகை ரோகிணி, மார்ச் 19, 2008 அன்று காலமான மூத்த நடிகரின் நினைவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். ட்விட்டரில், ரோகிணி பகிர்ந்து கொண்டது;

"மார்ச் 19, 2008, எப்போதும் போல ஒரு சாதாரண நாளாகவே தொடங்கியது, ஆனால் ரிஷிக்கும் எனக்கும் மட்டும் எல்லாவற்றையும் மாற்றி விட்டது. ரகு சினிமாவின் இந்த காலகட்டத்தை மிகவும் நேசித்திருப்பார், மேலும் ஒரு நடிகராக அவர் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்."

- என்கிறது ரோகிணியின் நேற்றைய டிவிட்டர் பதிவு.

ரோகிணி, தனது கணவருக்கு அவர் இவ்வளவு தூரம் தமது ரசிகர்களால் கொண்டாடப்படும் விஷயம் இறக்கும் போது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுவதாக முன்னதாக கடந்த ஆண்டுகளில் அவர் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இவ்வளவு தூரம் தனது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று தெரிந்திருந்தால் அவர் நிறையவே சந்தோசப்பட்டிருப்பார் என்றும் அந்த நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தார். ரகுவரனை நடிப்பின் உச்சம் என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், அவரோ உயிருடன் இருந்தவரை, தனது நடிப்பை மேலு, மேலும் மெருகூட்ட என்னவெல்லாம் என்று சிந்திப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்ததாக அவரே ‘காஃபீ வித் அனு’ எனும் தனது பழைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். அவரது மனநிலையை ரோகிணியின் நேற்றைய டிவிட்டர் பதிவும் உறுதி செய்வதாகவே இருக்கிறது. காலத்தால் அழியாக் கலைஞன் ரகுவரனின் இழப்பு தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மிகப்பெரிய நஷ்டமே!

ரோகிணி மற்றும் ரகுவரன் இருவரும் 1996 இல் திருமணம் செய்து கொண்டனர், கருத்து வேறுபாடு காரணமாக 2004 இல் திருமணமான எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஜோடி பிரிந்தது. தம்பதியருக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். ரகுவரன் தனது 49 ஆவது வயதில் அதிக மது அருந்தியதன் காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்ததால் காலமானார். விக்ரம் நடித்த கந்தசாமி உட்பட பல படங்களின் படப்பிடிப்புகளில் அவர் தொடர்ந்து கலந்து கொண்டிருந்த பிஸியானதொரு நேரத்தில் திடீரென உடல் நலக்குறைபாடு காரணமாக அவரது மரணம் நிகழ்ந்தது.

தனது 26 வருட கலை வாழ்வில் ரகுவரன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் அவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர். முதல்வன் படத்தில் அவரது நடிப்பு அவருக்கு சிறந்த வில்லனுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றுத் தந்தது. பாட்ஷா, மைக்கேல் ராஜ், மேகம் கருத்திருக்கு, கூட்டுப் புழுக்கள், கவிதை பாட நேரமில்லை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது பிற பிரபலமான திரைப்பட லிஸ்ட்டில் அடங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com