
ஆண்டுதோறும் நடந்துவரும் ஆடம்பர விழாவான மெட் காலா 2023 நிகழ்ச்சி மே 1ம் தேதி திங்கட்கிழமை கோலாகலமாக நியூயார்க்கில் தொடங்கியது. இதில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் ஒரு லட்சம் முத்துக்கள் பதித்த அசத்தல் உடையில் தேவதைபோல் வலம்வந்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
கடந்த 2019ம் ஆண்டு, ஃபேஷன் துறையில் பிரபலமாகத் திகழ்ந்த கார்ல் லாகர்ஃபெல்ட் உயிரிழந்ததையடுத்து, அவரை கவுரவிக்கும் வகையில் பிரபலங்கள் பலரும் விதவிதமான ஆடைகளை அணிந்து இந்நிகழ்விற்கு வந்திருந்தனர்.
அதிலும், ஜார்ட் லெடோ, டோஜா கேட் இருவரும் கார்ல் லாகர்ஃபெல்ட்டின் பூனையான ‘Choupette ’ தோற்றத்தில் வந்து பிரமிப்பூட்டினர்.
இந்த பிரம்மாண்ட நிகழ்வில், இந்தியாவைச் சேர்ந்த ஆலியா பட், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்துகொண்டனர். அதில் நடிகை ஆலியா பட் அணிந்திருந்த ஆடை ரசிகர்களைக் மிகவும் கவர்ந்திழுத்தது. பொதுவாகவே ஆடை விஷயத்தில் வித்தியாசத்தை எதிர்பார்ப்பவர் ஆலியா பட். அதிலும் முதல் முறையாக இந்நிகழ்வில் அவர் கலந்துகொள்கிறார். அதனாலேயே அவரது ஆடை விஷயத்திலும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
அந்தவகையில், அவர் தற்போது அணிந்து வந்த ஆடையானது, வெள்ளை நிற கவுனில், ஒரு லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்டு, பார்ப்பதற்கே ஒரு தேவதையாக காட்சியளித்தார். அவருடைய இந்த ஆடையானது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். அவரை இந்த உடையில் பார்த்த ரசிகர்கள் பலரும் மெய்சிலிர்த்துபோய் உள்ளனர்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வில் ஃபேஷன் ஐகானாக இருப்பவர்கள் கவுரவிக்கப்படும் நிலையில், சினிமாத்துறை, அரசியல், சோசியல் மீடியா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.