

எம்ஜிஆரின் மெகா ஹிட் பாடல் ஒன்று சென்சார் கத்திரியில் சிக்கியது. அதை எம்ஜிஆர் எப்படி சாமர்த்தியமாக கையாண்டார் தெரியுமா?
எம்ஜிஆர் சினிமாவிலும் அரசியலிலும் உச்சத்தை தொட்டவர். அவர் தனது படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்வார். அதிலும் பாடல் வரிகள், இசை எல்லாவற்றையும் தனது ரசிகர்கள் எப்படி விரும்புவார்களோ அதையே தேர்வு செய்வார். தனது படத்தில் இடம்பெறும் பாடல்கள் கருத்துள்ளவையாகவும், மக்கள் விரும்பும்படியாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்வார்.
'பெற்றால் தான் பிள்ளையா' என்ற படத்தில் ஒரு ஆதரவற்ற குழந்தையை திருமணம் ஆகாத இளைஞர் எடுத்து அன்பாக வளர்ப்பது தான் கதை. இந்த படத்தில் வருகின்ற ஒரு பாடல் தான் சிக்கலுக்கு உள்ளானது. இந்தப் பாடலை இசை அமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன், பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' என்ற பாடலில் "அறிவுக்கு இணங்கு வள்ளுவரைப் போல், அன்புக்கு இணங்கு வள்ளலாரைப் போல், கவிதைகள் வழங்கு பாரதியைப் போல், மேடையில் முழங்கு திரு.வி.க போல் என்று இருக்கும். ஆனால் "மேடையில் முழங்கு அறிஞர் அண்ணாவைப் போல்" என்று தான் கவிஞர் வாலி முதலில் எழுதி இருந்தார்.
இந்த வரிகள் தான் சென்சார் போர்டு கத்திரியில் சிக்கியது. காரணம் அப்பொழுது அறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆகவில்லை. பெரும் புகழுடன் ஒரு மாபெரும் தலைவராக உருவாகி இருந்தார். அதனால் சென்சார் போர்டு அந்தப் பாடலை நீக்க வேண்டும் என்று கூறியது. இந்தப் பாடலில் எதற்கு அண்ணா பெயர் போடுகிறீர்கள் என்று சென்சார் போர்டு தடை போட, எம்ஜிஆர் சென்சார் போர்டிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அண்ணா பெயர் இருக்கக் கூடாது என்று சென்சார் போர்டு உறுதியாக இருந்துள்ளது. வேறு வழி இல்லாமல் ஒரு சிறு மாற்றத்தை செய்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில் மேடைப்பேச்சில் அண்ணாவைப் போல் அற்புதமாக பேசக் கூடியவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க என்னும் திரு வி. கல்யாண சுந்தரனார். எனவே "மேடையில் முழங்கு திரு.வி.க போல் என்று பாடல் வரியில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த படத்தில் பாடல் வரியில் பெயர் மாற்றப்பட்டாலும், மேடையில் முழங்கு திரு.வி.க போல் என்ற வரிக்கும் ரசிகர்களின் கைத்தட்டலுடன், விசில் சத்தமும் பறந்தது. காரணம் அந்தப் பாடல் பல பேருக்கு "மேடையில் முழங்கு திருவிக போல்" என்பதற்கு பதிலாக "மேடையில் முழங்கு தி.மு.க போல் என்று கேட்டிருக்கிறது. அண்ணாவும் தி.மு.கவும் ஒன்றுதானே என்று ரசிகர்கள் கைதட்டி கொண்டாடி இருக்கிறார்கள்.