உழைப்பு இருந்தால் பணம் சம்பாதிக்கலாம், சொத்துக்கள் வாங்கலாம்... ஏன்? இந்தக் காலத்தில் சொல்வதுபோல் பெத்த அம்மாவைத் தவிர எதையும் வாங்கலாம் பணம் இருந்தால்... ஆனால் மனிதர்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது என்பதே பதிலாக வரும்.
வள்ளல் எனும் தயாள குணத்தைப் பெற்று, உலகில் தனக்கென தனி ராஜ்யத்தை அமைத்து அதில் ராஜாவாக இருந்தபோதும், இல்லாதபோதும் மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்தவர்தான் நகைச்சுவை மேதை எனப் புகழப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அம் மாமனிதர் மறைந்த இந்த நாளில் அவரின் பெருமைகளை நாமும் தெரிந்து மகிழ்வோம் .
1908ல் நாகர்கோவில் கிராமத்தில் பிறந்து, தமிழ்த் திரையுலகில் ‘இந்தியாவின் சார்லிசாப்ளின்’ என்று அறியப்பட்டு சிறந்து, ஒன்றரைக்கோடி வருமான வரி கட்டுமளவுக்கு வருமானம் ஈட்டி, உதவி என்று வந்தவருக்கு அனைத்தையும் தாரை வார்த்து, ஊர் போற்றிய வள்ளலாய் வாழ்ந்து, முடிவில் அனைத்தையும் இழந்து, வாழ்வு என்றால் இதுதான் என்பதை உணர்த்தி, இறுதியில் 1957ல் மறைந்தவர் . இத்தனையையும் செய்ய அவர் நூறாண்டுகள் வாழவில்லை. வெறும் 49 வருடங்களே...
பகுத்தறிவு பெருகாத அந்தக் காலத்தில் மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து சமூகப்புரட்சி செய்ததில் கலைவாணரின் பங்கு மகத்தானது. “சிரிப்பு… ஹாஹா சிரிப்பு... சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு..” எனும் பாடல் ஒன்றே போதும் இதை நிரூபிக்க.
மற்றவர்களை சித்திக்க வைத்த இவர் படித்தது என்ன தெரியுமா? நான்காம் வகுப்பு மட்டுமே. ஆம்... குடும்ப வறுமையால் அவருக்கு கல்வி கிடைக்காமல் போயிற்று. சிறு வயதில் நடிப்பின்மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக, நாடகங்கள் நடைபெறும் இடங்களில் தின்பண்டங்களை விற்று, நாடகத்தின் மீது வந்த ஈர்ப்பால் ஒரு நாடகக்குழுவில் நடித்து, பின் தனது நண்பர்களுடன் நாடகக் குழுவைத் துவங்கி நடத்தியவர். தான் சொல்லும் வசனங்களை தானே எழுதிப் பேசியவர். சதிலீலாவதியில் அறிமுகம். அப்போது ஏற்பட்டு, இறுதி வரை தொடர்ந்த எம் ஜி ஆரின் வலிமையான நட்பு இவருக்குக் கிடைத்த மாபெரும் சொத்து!
பெரும் புகழுடன் மற்றவருக்கு புத்திமதிகளை வாரி வழங்கியவர், தன் வாழ்க்கையில் சற்று சறுக்கிய சந்தர்ப்பங்களும் உண்டு. ஆனால் அவரின் நேர்மை எனும் கவசம் அவரை எந்நாளும் காப்பாற்றியது எனலாம். அவர் செய்த தான தருமங்கள் ஏராளம். ஆனால் குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் சில கரும்புள்ளிகளை காலம் அவருக்குப் பரிசாகத் தந்தது. ஆம். அவரின் மனைவி டி.ஏ.மதுரம் என்றுதான் அனைவரும் அறிவோம். ஆனால் நாகம்மை எனும் முதல் மனைவியுடன், மதுரம் மற்றும் அவரின் தங்கை வேம்பு என மூன்று மனைவிகளுடன் வாழ்ந்து ஐந்து மகன்களையும் மூன்று மகள்களையும் பெற்றவர். ஒருவனுக்கு ஒருத்தி எனும் நியாயத்தை அவர் கடைப்பிடிக்கவில்லை.
அடுத்த நிகழ்வு. தமிழகமே ஆடிப்போன இந்து நேசன் பத்திரிக்கையின் ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை வழக்கு. அப்போது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜபாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவித்தது என் எஸ் கிருஷ்ணனின் இமேஜ் மேல் விழுந்த கரும்புள்ளி. ஆனால், இதன் பின்னான அவரின் திரைவாழ்வு இதனால் பெரிதும் பாதிக்கப்படவில்லை. காரணம் அவரின் துணிவுடன் கூடிய நகைச்சுவையும் பண்பும்தான்.
பெரும் பணத்தை வரியாக கட்டியவரின் குடும்பத்திற்கு இறுதி நாட்களில் தேவையான உதவிகளை செய்தது எம்.ஜி.ஆர்.தான். மக்களிடையே பெரும் மதிப்பைப் பெற்ற கிருஷ்ணன் ‘கலைவாணர்’ எனும் பட்டத்தைப் 1947ல் பெற்று சிறப்பிக்கப்பட்டார். 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 ல் இவரின் மறைவுக்குப் பின் தமிழக அரசு இவரின் நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் எனப் பெயர் சூட்டிக் கெளரவித்தது.
கொடுத்து சிவந்த கரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது எம்.ஜி. ஆர். மட்டுமே. ஆனால் அவரே “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்கள் என்றால் அதற்கு முழு முதல் காரணமானவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன்தான்” என்று புகழ்ந்துள்ளார்.
குடும்பவாழ்க்கையையும் சிறைவாழ்க்கையையும் கண்டு கலங்காமல் வாழ்க்கை என்றால் இன்ப துன்பங்கள் சகஜம் என்ற விழிப்புணர்வை தன் நகைச்சுவை மூலம் ஊட்டியவர் .
கலைவாணர் பற்றிய செய்திகள் என்சைக்ளோபீடியா அளவிற்கு சுவாரஸ்யம் மிகுந்தவையாக கொட்டிக் கிடக்கிறது. எதை எடுப்பது எதை விடுப்பது என்று அறியாமல் எடுத்தவை இந்த சில துளிகள் மட்டும்.
மாபெரும் கலைஞனைப் போற்றுவோம்!