

தமிழக அரசு கலைகளை ஊக்குவிக்கும் விதமாக திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகில் வாழ்நாள் பங்களிப்பைப் போற்றும் வகையில், "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்" விருதை 2022ஆம் ஆண்டு முதல் அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.பி. முத்துராமனுக்கு இந்த சிறப்பு விருதுகளை அரசு அறிவித்துள்ளது.
2022-ல் கதை வசனகர்த்தா ஆரூர்தாஸ், 2023-ல் கவிஞர் மு. மேத்தா மற்றும் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்விருதை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து 2024ஆம் ஆண்டுக்கான விருதை எம்.என். ராஜமும், 2025ஆம் ஆண்டுக்கான விருதை எஸ்.பி. முத்துராமனும் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் இருவரின் திரைப்பணி, கலைத்துறையில் நீண்ட கால சேவையை அரசு உயர் மட்டத்தில் மதிப்பீடு செய்து வழங்கப்படுகிறது.
அகவை 90 ல் இருக்கும் புகழ்பெற்ற மூத்த கலைஞர்களான இருவரும் தமிழ்நாடு அரசின் "கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்" விருதுகள் பெறுவது திரையுலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
விருதுகள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட உள்ளதாகவும் இருவருக்கும் தலா ₹10 லட்சம் பணப்பரிசும் மற்றும் ஒரு நினைவு நினைவுப் பரிசும் வழங்கி கௌரவிப்பார் எனவு கூறப்பட்டுள்ளது.
எஸ். பி. முத்துராமன் – சிறப்பு
தமிழ் சினிமாவை வணிக வெற்றியுடன் தரமான கதைக்களம் என்ற சமநிலையில் கொண்டு வந்த முதல் மாஸ் டைரக்டர் எஸ். பி. முத்துராமன் (S. P. Muthuraman) என்பது குறிப்பிடத்தக்கது. 'களத்தூர் கண்ணம்மா'வில் உதவி இயக்குநராக சினிமாவுக்குள் நுழைந்த இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்களை வைத்து 'முரட்டுக்காளை', 'தர்மத்தின் தலைவன்', 'குரு சிஷ்யன்', 'சகலகலா வல்லவன்', 'ஜப்பானில் கல்யாணராமன்' உட்பட 70க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். திரையுலகில் கமர்ஷியல் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர். குடும்பக்கதைகளை சென்டிமெண்ட் , சமூக கருத்து எனக் கலந்து கட்டி அனைத்து வயதினரையும் கவர்ந்த திறமை மிக்க இயக்குநரான இவர் பலருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.தற்போது பல நிகழ்வுகளில் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து வருவது சிறப்பு.
எம். என். ராஜம் (M. N. Rajam) - சிறப்பு தமிழ் சினிமாவின் மறக்க முடியாத நடிகை ஆவார். நாடகங்களில் சிறு வயதிலேயே கலைப் பயணத்தைத் தொடங்கிய எம்.என். ராஜம், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். . 1950–60களில் தனது உணர்ச்சிகரமான நடிப்பு மூலம் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.'ரத்தக்கண்ணீர்', 'நாடோடி மன்னன்', 'பாசமலர்' என 200க்கும் மேற்பட்ட படங்களில் துயரம், தியாகம், திடீரென வரும் திருப்பங்கள் போன்ற அனைத்து கதாபாத்திரங்களிலும் இயல்பாக வெளிப்படுத்திய தனது அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர். புகழ்பெற்ற பிண்ணனி பாடகர் ஏ.எல்.ராகவனை திருமணம் செய்த பின் சினிமாவிலிருந்து விலகி ஓய்வு பெற்றார். இன்றும் பழைய படங்களைப் பார்க்கும்போது, எம். என். ராஜத்தின் நடிப்பு வசன உச்சரிப்பு போன்றவை பார்வையாளர்களைத் தொட்டுவிடும் எனலாம்.
இந்த உயரிய விருது பெறும் எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமன் இருவருக்கும் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி மகிழ்கின்றனர்.