நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் எம்புரான் படம் இந்திய படங்கள் செய்த சாதனைகளையெல்லாம் முறியடித்திருக்கிறது. வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.
மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் ப்ரித்விராஜ். தமிழிலும் அவ்வப்போது சிறப்பான படங்களை கொடுப்பார். சில காலங்களாக அவரது படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லாத பட்சத்தில், கம் பேக்கின் முதல் படியாக சலார் படம் அமைந்தது. பிரபாஸுக்கு நண்பராக நடித்தாலும், அது ஒரு முக்கிய கதாபாத்திரம் என்பதால், டபுள் ஹீரோ படம்போல் தான் இருந்தது. அதன்பின்னர், ப்ரித்வி ராஜ் நடித்த ஆடு ஜீவிதம் படம் அதைவிட நல்ல வரவேற்பை பெற்றது. பல விருதுகளை வாங்கி வருகிறது.
ப்ரித்வி ராஜ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் அறிமுகமாகியிருக்கிறார். கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்' மூலம் இவர் இயக்குநராக அறிமுகமானார். இவரின் முதல் படமே 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அந்தவகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இந்த படத்தையும் ப்ரித்வி ராஜ் தான் இயக்கினார். இதில் மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 27ம் தேதி வெளியாகிறது.
அந்தவகையில் இப்படத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கப்பட்டது. புக் மை ஷோ இணையத்தளத்தில் ஒரு மணி நேரத்தில் இதுவரை வேறு எந்த இந்தியப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு 96,140 டிக்கெட்டுகள் விற்பனையானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக லியோ படத்திற்கு 82 ஆயிரமும், புஷ்பா 2 படத்திற்கு 80 ஆயிரம் டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகளவில் எம்புரான் படத்துக்கான முன்பதிவு வருமானம் இப்போதே ரூ. 12 கோடியைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் எம்புரான் படத்தின் முதல் நாள் வசூலில் உலகளவில் ரூ. 40-50 கோடி வரை கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எம்புரான் படத்தின் முன்பதிவு குறித்து பிரித்வி ராஜே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.