நவீனத்துவ காதல்களை கண் முன் நிறுத்தும் "மார்டன் லவ் சென்னை"!

நவீனத்துவ காதல்களை கண் முன் நிறுத்தும்  "மார்டன் லவ் சென்னை"!

தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ஆறு பாகங்களை கொண்ட ஆந்தாலஜி படம் தான் "மார்டன் லவ் சென்னை"

லாலாகுண்டா பொம்மைகள்

முதல்கதையான லாலாகுண்டா பொம்மையை இயக்குநர் ராஜூமுருகன் இயக்கியுள்ளார். இன்றைய இளம் தலைமுறையினரின் கண்டதும் காதல் , கருக்கலைப்பு, அடுத்த காதல் , எவ்வித குற்றவுணர்வு இல்லாமல் திருமணம் என்கிற நவீனத்துவ காதல்கள் விஷயத்தை கதைகளமாக தேர்வு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே காதல் தோல்வியில் கருக்கலைப்பு வரை சென்றிருக்கும் பிஸ்கட் தயாரிக்கும் ஹீரோயினுக்கும் , பானிப்பூரி விற்கும் வடநாட்டு பையனுக்கும் காதல் . அதில் சில டிவிஸ்ட்களை வைத்து கலகலப்பாக கதையை நகர்த்தி சென்றாலும் சில சீரியஸான விஷயங்களை கூட சிரிப்பாக சொல்வதாக தோன்றுகிறது.

கருக்கலைப்பு செய்த பெண்ணிடம் இவன்கிட்ட எப்படி ஏமாந்த என்பதற்கு "ப்ளேட்டில் நாலு பானிப்பூரிக்கு பதில் ஆறு வைச்சி தந்தான்" என அப்பாவியாக சொல்கிறார். இன்றைய இளம் தலைமுறை எதை காதல் என புரிந்து கொள்கிறார்கள் என்பதின் குறியீடு.

சில இடங்களில் வசனங்கள் நச் ரகம். என்ன வடநாட்டவன், தமிழன் , ஆம்பிளைன்னாலே அப்படித்தான் என பேசும் இடம் "நச்" ரகம்.

இமைகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த கதையின் கதாநாயகன் அசோக்செல்வன். கண்பார்வை குறைபாடுடைய காதலி தேவியை மணக்கிறார் அசோக் செல்வன்.

கண்பார்வை குறைபாடோடு போராடி குடும்பத்தை, குழந்தையை வளர்க்கும் பெண்ணின் நுட்பமான வலிகளை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். நாளடைவில் வெறுமையை உணரும் ஹீரோயினை அவளது சிறுவயது விருப்பமான வீணையை கற்று கொண்டு அவளது வெறுமையை போக்குவதாக கதை முடிகிறது. ஆனால் கதையில் இன்னமும் கொஞ்சம் அழுத்தம் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

காதல் கண்ணுல ஹார்ட்ல இருக்குற ஈமோஜி

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ள இக்கதையில் ரிதுவர்மா ஹீரோயினாக நடித்துள்ளார். சினிமா பைத்தியமான ரிதுவர்மா தனது ஆதர்ச கனவுநாயகனை நிஜ வாழ்க்கையிலும் தேடுகிறார். தனது பள்ளி காதலன் , கல்லூரி காதலன், அலுவலக காதலன் என அனைவரிடமும் அந்த கற்பனை உலக கதாநாயகனை தேடியலைந்து தோல்வியடைகிறார். இறுதியில் அவர் பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள்ளையே அவளின் கனவுலக கதாநாயகனாக இருக்கிறார் என கதை முடிகிறது. இன்றைய நவீன ரக பெண்களையும் அவர்களின் திரைபிம்ப கதாநாயகனை நிஜவாழ்க்கையில் தேடும் சிறுபிள்ளைதனங்களையும் கண்முன்னே நிறுத்துகிறார் ரிதுவர்மா.

மார்கழி

பதின்பருவ காதலை பார்ப்பவர் கண்முன்னே நிழலாட வைக்கும் கதைக்களம். தனது பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு டிப்ரஷனில் இருக்கும் பதின்பருவ மாணவி சர்ச்சில் பாட்டு வகுப்பில் தன்னை போலவே இருக்கும் சக மாணவன் மீது ஈர்ப்பு கொள்கிறாள். துன்பியலான அவளது மனநிலை அவனது வரவால் மெல்ல மெல்ல பூவாக மலர்வதை அழகியலோடு சொல்லியிருக்கிறார் இயக்குநர் அக்ஷய் சுந்தர். அந்த பதின்பருவ ஈர்ப்பில் காதலில் மார்கழியின் ஈரமும் குளிர்ச்சியும் நிரம்பி வழிகிறது. ஹெட்போனில் கேட்கும் இளையராஜாவின் பாடலும் , பியானோ கவிதைகளும் , உறவுகள் தொடர்கதை பாடலும் அழகியல் கவிதை.

பறவை கூட்டில் வாழும் மான்கள்

சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் கிஷோரும் , விஜயலட்சுமி யும் ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்கிறார்கள். மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் இரு குழந்தைகளோடு வாழும் கிஷோர் , விவாகரத்தான விஜயலட்சுமி மீது கொண்ட காதலால் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். இது குறித்து ரம்யா நம்பீசனிடம் சொல்லி விஐயலட்சுமியை வீட்டுக்கு வரவழைக்கிறார். கிஷோர் வீட்டுக்கு வரும் விஜயலட்சுமி , ரம்யா நம்பீசன் மற்றும் கிஷோர் ஆகியோரின் உரையாடல்கள் மிகச் சிறப்பாக காட்சியமைப்புகளோடு நகர்கிறது. தந்தை டெல்லிகணேஷ் மகனிடம் கேட்கும் கேள்வியும் , அதற்கு கிஷோர் கொடுக்கும் பதிலும் நச் ரகம்.

கதைக்கு பலம் சேர்க்கும் ஆரம்பத்திலும் இறுதி காட்சியிலும் வரும் ஃசெல்பி மொத்த கதையையும் சொல்லிவிடுகிறது. இதை பாரதிராஜா தான் இயக்கினாரா? என வியப்பு மேலிடுவதை தவிர்க்க முடியவில்லை. "பன்னீரை தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை...சேர்ந்தாடும் இன்நேரமே" என வரும் மூடுபனி பாடலுக்கு விஜயலட்சுமி, கிஷோர் வரும் காட்சிகள் " ஆஹா ரகம்"...இன்னும் 50 வருடம் ஆனாலும் இளையராஜாவின் இசையில் இருக்கும் அந்த ப்ரெஷ்னஸ், எங்கே எப்போது பயன்படுத்தினாலும் ஹிட் அடிக்கும். ராஜா ராஜா தான்.

நினைவோ ஒரு பறவை

தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருக்கும் இந்த கதை இன்றைய நவீன ரக காதல்களை அப்பட்டமாக காட்டுகிறது. ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் இரு நவீன ரக ஜோடிகளின் அழுத்தமான காதல் , கூடல் , ஊடல் என மாறி மாறி காட்டப்படுகிறது. ஆனால் கதை எது கற்பனை எது என பிரித்து பார்ப்பதில் பெருங்குழப்பம். காதலின் அழுத்தம் மட்டும் படம் நெடுக பரவலாக உணர்த்தபடுவது சிறப்பு. இறுதிகாட்சியில் நான் ஏன் உன் கூட இருக்கணும்...என கதாநாயகி கேட்க....ஏன்னா அம்னீஷியா நிலையிலும் நான் உன்னை மட்டும் தானே மறக்கலை என பதிலளிக்கும் இடம் கவிதை.

மொத்தத்தில் இந்த ஆறுகதைகளும் இன்றைய நவீன ரக காதல்களை கண்முன்னே காண்பிக்கிறது. இன்னமும் சில இடங்களில் கத்தரி போட்டிருந்தால் கிரிஸ்பாக இருந்திருக்கும். இன்றைய மார்டன் உலகின் நடைபெறும் மார்டன் காதல் - அமேசான் ஓடிடியில் கண்டு களிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com