பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்துள்ளது துல்கர் சல்மான் நடித்த கிங் ஆப் கொத்தா. அபிஷேக் ஜோஷி இப்படத்தை இயக்கி உள்ளார். ஜீ ஸ்டூடியோ இப்படத்தை தயாரித்துள்ளது.
கேரளாவில் உள்ள கொத்தை என்ற ஊரில் ராஜு (துல்கர் ) மற்றும் கண்ணன் (சபீர் ) நண்பர்களாக உள்ளார்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பிரிந்து விடுகிறார்கள். கண்ணனின் அராஜகம் கொத்தையில் தலைவிரித்து ஆடுகிறது.ஊரை விட்டு சென்ற ராஜு வை மீண்டும் கொத்தைக்கு வர வைத்து கண்ணனை அழிக்க நினைக்கிறார். ராஜுவும் மீண்டும் ஊருக்கு வருகிறார். அதன் பின்பு மோதல் அதிகமாகி கதை நகர்கிறது.
சேட்டன்களுக்கு நமது தமிழ், தெலுங்கு படங்களை பார்த்த பாதிப்பு வந்துவிட்டது போல தெரிகிறது. வழக்கமான கேங்ஸ்டர் கதையையே எந்த வித சுவாரசியமும் இல்லாமல் எடுத்து தந்திருகிறார்கள் இந்த சேர நாட்டுகாரர்கள்.காட்சிக்கு காட்சி யாரையாவது வெட்டிக்கொள்கிறார்கள் அல்லது குத்தி கொல்கிறார்கள் சர்வம் ரத்த மயம். கட்டடற்ற வன்முறை பல இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது துல்கர் சல்மானுக்கு படம் முழுவதும் தரும் பில்டப்கள் சிரிப்பை வரவைக்கிறது.
தென்னிந்திய நடிகர்களில் கதைக்கு முக்கியத்துவம் தந்து நடிக்கும் ஹீரோக்களில் துல்கரும் ஒருவர். ஆனால் இந்த கொத்தையில் கோட்டை விட்டு விட்டார் என்று சொல்லலாம் கதையை நம்பாமல் அரிவாளை நம்பி இறங்கி விட்டார் போல் தெரிகிறது வில்ல ன் சபீர், நாயகி ஐஸ்வர்ய லட்சுமி, ஷம்மி திலகன், பிரசன்னா போன்றவர்கள் சரியான நடிப்பை தந்துள்ளார்கள்.
படத்தில் தொழில் நுட்ப அம்சங்கள் சிறப்பாகவே உள்ளன. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவில் கொத்தை ஊர் இன்னமும் அழகாக தெரிகிறது. லைட்டிங் மூலம் 1986 ஆண்டு காலகட்டத்தை கண் முன் காட்டிவிட்டார். கலை இயக்குனரின் பங்களிப்பு கேரள வீதிகளை சரியாக பதிவு செய்துள்ளது. கேரள தேசத்தில் இருந்து வரும் படங்கள் மாறுபட்ட சிந்தனைகளுடன், சிறந்த திரைக்கதை கொண்ட படங்களாக இருக்கும் எனும் எண்ணத்தை கிங் ஆப் கொத்தா பூர்த்தி செய்யாமல் கடந்துள்ளது .