திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்ற மாணவன் தனது சக பள்ளி மாணவர்களால் சாதி காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சின்னதுரை மற்றும் அவரது தங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசின் சார்பில் கல்வித் துறை அமைச்சர் ஒரு வீடியோ வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்தார். மேலும், சபாநாயகர் அப்பாவு மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் அந்த மாணவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரும் அந்த மாணவனிடம் வீடியோ அழைப்பு மூலமாகப் பேசினார். மேலும், இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘‘மாணவர்கள் அரிவாளுடன் பள்ளிக்குப் போகின்றனர். பள்ளியில் சாதி சண்டைகள் நடக்கிறது. மாணவர்கள் அரிவாளை எடுத்து வெட்டிக்கொள்ளும் நிலைக்கு சென்று இருக்கின்றனர். இந்த மோசமான நிலைக்கு திரைப்படங்கள்தான் காரணம்.
சினிமா சமூகத்துக்கு நல்லதை செய்ய வேண்டும். அன்பு, பாசம், ஒற்றுமையை பேசும் படங்களை உருவாக்க வேண்டும். ஆனால் அதை விட்டுவிட்டு வேறு எதை எதையோ சினிமாவில் பேசுகின்றனர். தற்போது படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு வன்முறைகளும் ஒழுங்கீன செயல்களும் படங்களில் குவிந்து கிடக்கின்றன. இப்படி இருக்கும் படங்கள்தான் நன்றாகவும் ஓடுகின்றன. ஒரு கோஷ்டியை தாக்கி ஒரு தரப்பினர் படத்தை எடுக்கின்றனர். அதை பார்த்து மற்றொரு கோஷ்டியினர் கோபித்துக் கொண்டு மற்றொரு படத்தை எடுக்கின்றனர். இவர்கள் எல்லோரும் ஒன்றுதான். எல்லோருக்கும் வாழ்க்கை முக்கியமானது.
நல்ல கதைகள் நிறைய இருக்கின்றன. அவற்றை திரைப்படங்களாக உருவாக்கலாம், திரைத்துறையில் மாற்றம் தேவை. அதைக் கொண்டு வருவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.