
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியானலும் ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் இன்று 5 திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி இந்த வாரம் முழுவதும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது. அந்த திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.
'மெட்ராஸ்காரன்'
2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் ஷேன் நிகாம், அந்த படம் பெரும் வெற்றி பெற்றதையடுத்து, 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார். ஒரு விபத்தால் கதாநாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்தப்படம். கடந்த ஜனவரி 10-ம்தேதி வெளியான இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று ஆஹா மற்றும் சிம்ப்லி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தை திரையரங்குகளில் பார்க்க முடியாதவர்கள் இன்று முதல் ஓடிடி-யில் கண்டு களிக்கலாம்.
'தி கிரேட்டஸ்ட் ரைவல்ரி - இந்தியா பாகிஸ்தான்'
பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு இருநாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் வெறித்தனமாக ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டியை காண விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி ஆவணப்படம் ஒன்றை நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களை இந்த வாரம் குஷிப்படுத்தும் வகையில் இந்த ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் இன்று வெளியாக உள்ளது.
'கேம் சேஞ்சர்'
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் மற்றும் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ள படம் 'கேம் சேஞ்சர்'. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த ஜனவரி 10-ம்தேதி வெளியாகி படுதோல்வி அடைந்துடன் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அஞ்சலி, சமுத்திரக்கனி, ஜெயராம், சுனில் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் இன்று வெளியாக உள்ளது.
'விவேகானந்தன் வைரலானு'
இயக்குநர் கமல் இயக்கத்தில் கடந்தாண்டு மலையாளத்தில் தியேட்டரில் வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் விவேகானந்தன் வைரலானு. இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ, லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா விஜய், கிரேஸ் ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மனைவி மற்றும் லிவ்விங்டூ ரிலேஷன் ஷிப்பில் இருக்கும் பெண்களை இரவில் கொடுமைப்படுத்தும் அரசு ஊழியரான விவேகானந்தனிடம் இருந்து அந்த பெண்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதை நகைச்சுவையுடன் சொல்லும் கதை தான் இந்தப்படம். இன்று ஆஹா தமிழ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ள இந்த படத்தை உங்கள் மனைவியுடன் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
'டாகு மகாராஜ்'
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படம் 'டாகு மகாராஜ்'. ஜனவரி 12-ம்தேதி வெளியான இந்த படத்தை பிரபல இயக்குனர் பாபி கொல்லி இயக்கி உள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பாலகிருஷ்ணாவின் கெரியரில் இந்த படம் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாராங்கள் கூறுகின்றன. நந்தமுரி பாலகிருஷ்ணா ரசிகர்களை மகிழ்சிக்க இப்படம் வருகிற 9-ந்தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.