பயோபிக்காகும் இளையராஜாவின் வாழ்க்கை! ஹீரோ யார் தெரியுமா?
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய படத்தில் இளையராஜாவாக முன்னணி நடிகர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இளையராஜா பாடல்கள் என்றால் அனைத்து வயதுடையவர்களும் கேட்டு மகிழும் பாடல்களாக இருக்கும். இதுவரை கிட்டத்தட்ட 1000 படங்களில் 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார். நடிகர் சிவாஜி கணேசன் முதல் சூரி வரை தனது பாடல்களால் ’அன்றும், இன்றும், என்றும்’ என தனது பாடல்களால் ரசிகர்களை ஈர்க்க இளையராஜா தவறியதில்லை.
தனது 50 வருட இசைப் பயணத்தில் ஏறத்தாழ 20 ஆயிரம் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியிருக்கிறார் இளையராஜா. இதுபோக இசைத் துறையில் பத்மபூஷன், பத்ம விபூஷன் மற்றும் சங்கீத நாடக அகடாமி ஆகிய உயரிய விருதுகளை வாங்கியிருக்கிறார். அதேபோல் 2022ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் லதா சீனிவாசன் தனது X தளத்தில் இளையராஜா வாழ்க்கை வரலாற்றுப் படத்தைப் பற்றி சில அப்டேட்கள் பதிவிட்டிருக்கிறார்.
அவருடைய பதில்நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருப்பது உறுதியானது. இளையராஜாவின் வாழ்க்கை வரலாறான இந்த படம் 2024ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி 2025ம் ஆண்டு திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் ஒருமுறை யுவன் சங்கர் ராஜா இதைப்பற்றிப் பேசும்போது தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தனுஷ் நடிப்பது மிகவும் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறியிருந்ததைப் பதிவில் சுட்டிக்காட்டி இருக்கிறார் லதா சீனிவாசன். தனுஷ் முதல்முறை வாழ்க்கை வரலாறு சார்ந்த கதைக் களத்தில் நடிக்கவிருக்கிறார்.
இளையராஜாவின் தீவிர ரசிகரான தனுஷ் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் நடிப்பது அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பாக அமைந்தது. இந்த படத்தை கனெக்ட் மீடியா தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் பயோபிக் படத்தை யார் இயக்கவுள்ளனர் என தற்போது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் படத்தை கனெக்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள உறுதியாகி இருக்கிறது. இப்போது மோகன் லாலின் Pan India அளவில் எடுக்கப்படும் Vrushabha என்ற படத்தை கனெக்ட் தயாரித்து வருகிறது.
இளையராஜாவும் தனுஷும் இணைந்து ஹிட்டான பாடல்களைத்தான் இதுவரை கொடுத்திருக்கிறார்கள். இப்போது இளையராஜாவாக தனுஷ் நடிக்கும் இந்த படம் எதிர்பார்க்கும் அளவிற்கு ஹிட் தருமா என்பது இயக்குநர் கையில் தான் இருக்கிறது.