ரஜினியா? கமலா? - மாணவர்கள் சொல்வது என்ன?

Muthu - Aalavandhan
Muthu - Aalavandhan
Published on

டந்த சில ஆண்டுகளாக பழைய தமிழ் திரைப்படங்களை ரீ ரிலீஸ் செய்கிறார்கள். இந்த ரீ ரிலீஸ் படங்கள் சில புதிய படங்களை விடவும் வரவேற்பைப் பெற்று விடுகிறது. சிவாஜி நடித்த வசந்த மாளிகை, சூர்யாவின் காக்க காக்க ரீ ரிலீஸ் செய்யப்பட்டபோது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாளை மறுநாள் 8ம் தேதி ரஜினியின் முத்து மற்றும் கமலின் ஆளவந்தான் திரைப்படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுகின்றன. நமது கல்லூரி மாணவர்கள் இந்தப் படங்களை எப்படி வரவேற்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள சில மாணவர்களை அணுகினோம்.

காந்தி, முதுகலை மாணவர்
காந்தி, முதுகலை மாணவர்

காந்தி, முதுகலை மாணவர்: “ரஜினியின் முத்து படமும், கமலின் குருதிப்புனல் படமும் ஓரே நாளில் வெளியானது. முத்து படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. குருதிப்புனல் படம் சுமாரான வெற்றி பெற்றது. ஆனால், எங்களைப் போன்ற இளைஞர்கள் மேக்கிங்கிற்காக குருதிப்புனல் படத்தை விரும்பிப் பார்த்தோம். இதுபோல் ஆளவந்தான் படத்தையும் நாங்கள் வரவேற்கத் தயாராக  உள்ளோம். இன்று சாதாரண மசாலா படங்களை மட்டும் ரசிகர்கள் பார்ப்பதில்லை. நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் பார்க்கிறார்கள். ஆளவந்தான் கில்பெல் என்ற மேற்கத்திய பட சாயலில் எடுக்கப்பட்டதாகச் சொல்வார்கள். முத்து படம் ரீ ரிலீஸ் செய்தால் ரஜினி ரசிகர்கள் மட்டும் பார்ப்பார்கள். ஆனால், ஆளவந்தான் ரீ ரிலீஸ் செய்தால் கமல் ரசிகர்கள் மட்டுமில்லாமல், அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள்.”

ஜீவன், முதுகலை மாணவர்
ஜீவன், முதுகலை மாணவர்

ஜீவன், முதுகலை மாணவர்: “2010 ஆண்டுக்குப் பிறகு சினிமா ரசிகர்கள் மிகவும் மாறிவிட்டார்கள். இந்த ரீ ரிலீஸ் படங்கள் பழைய ரசிகர்களை வேண்டுமானால் குஷிப்படுத்தல்லாம். இன்றைய மாணவர்கள் விஜய், அஜீத், தனுஷ் போன்ற நட்சத்திரங்களுக்கு பெரிய அளவில் ரசிகர்களாக இருக்கிறார்கள். ரஜினி, கமலின் சமகால படங்களை வேண்டுமானால் இன்றைய மாணவர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். பழைய படங்களை தியேட்டரில் சென்று பார்ப்பார்கள் என்பது கேள்விக்குறியே.”

ஜான், இளங்கலை மாணவர்
ஜான், இளங்கலை மாணவர்

ஜான், இளங்கலை மாணவர்: “முத்து, ஆளவந்தான் படங்கள் ரீ ரிலீஸ் செய்வது எங்களது முந்தைய தலைமுறையினருக்கு வேண்டுமானால் ஒரு கொண்டாட்டமாக அமையும். ஆனால், எங்களைப் போன்ற மாணவர்களுக்கு இது மகிழ்ச்சியான விஷயமாக இருக்குமா என்பது தெரியவில்லை. எங்கள் அப்பா, சித்தப்பாக்களுக்கு, மாமாக்களுக்கு இந்த இரு படங்களின் ரீ ரிலீஸ் மகிழ்ச்சியைத் தரலாம்.”

ஆதித்யா, இளங்கலை மாணவர்
ஆதித்யா, இளங்கலை மாணவர்

ஆதித்யா, இளங்கலை மாணவர்: “முத்து, ஆளவந்தான் படங்கள் ரீ ரிலீஸ் என்பது நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு ரெட்ரோ படமாக இருக்கும். நாங்கள் முத்து படத்தை பல முறை டெலிவிஷனில் பார்த்திருக்கிறோம். ஆனால், எங்களில் பலர் ஆளவந்தான் படத்தை பார்த்ததில்லை. ஆளவந்தான் படத்தைப் பார்க்க எங்களில் பலர் ஆர்வமாக உள்ளோம்.”

ஷாலினி, இளங்கலை மாணவி
ஷாலினி, இளங்கலை மாணவி

ஷாலினி, இளங்கலை மாணவி: "எனது சாய்ஸ் தலைவர் முத்து படத்துக்குதான். ஒருவன் ஒருவன் முதலாளி பாட்டின்  ஸ்டைலிஷ்  ரஜினியை பெரிய திரையில் காண நானும் எனது நண்பர்களும் தயாராக இருக்கிறோம். ரீ ரிலீஸ் பண்ணா நிறைய ரசிகர்கள் பார்ப்பாங்க. இன்னைக்கு  வெளியாகும் படத்தைப் பார்க்கும்போது பழைய சக்ஸஸ் படங்களே பரவாயில்லை என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்து விட்டதன்  விளைவுதான் இந்த ரீ ரிலீஸ் என்று நினைக்கிறேன்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com