
இந்தியாவில் உள்ள பெண் பாடகர்களில் தனித்துவமான குரல் மற்றும் துடிப்பான ஆளுமைக்கு சொந்தக்காரர் உஷா உதூப். பாப் இசை, ஜாஸ் இசை பாடல்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல மொழி திரைப்படங்களிலும் பின்னணிப் பாடல்களை பாடியவர். இவர் 1960 களின் பிற்பகுதியில் தொடங்கி, 1970, 1980 களில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.
இசை இயக்குனர்கள் ஆர்.டி. பர்மன் மற்றும் பப்பி லஹிரி ஆகியோருக்காக உதுப் பல பாடல்களைப் பாடினார் . அதுவும் 'மெஹபூபா மெஹபூபா' மற்றும் 'டம் மரோ தம்' போன்ற ஆர்.டி. பர்மனின் சில பாடல்களையும் அவர் மீண்டும் பாடி பிரபலப்படுத்தினார். இவர் மலையாளம், தமிழ், கன்னட மொழிப்படங்களில் நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படமான மன்மதன் அம்புவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஸ்டார் விஜய்யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 1 மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் 5-ல் நடுவராக இருந்துள்ளார். இவரது கலைச்சேவைக்காக பத்ம பூஷண் உள்பட பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
இசைத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இவர் இந்தியாவில் உள்ள 17 மொழிகள் மற்றும் 8 சர்வதேச மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனைப் படைத்துள்ளார்.
இவரது கணீர் குரலைக்கேட்டாலே ஆடாத கால்களும் ஆட்டம் போடும், அந்த அளவுக்கு அவரின் குரலில் ஒரு வைப் இருக்கும். பெரிய பொட்டு, பட்டுப் புடவை, தலை நிறைய மல்லிகைப் பூ உஷா உதுப்பின் அடையாளம். இசை நிகழ்ச்சிகளில் பல மணிநேரம் பாடினாலும், இறுதிவரை ரசிகர்களை உற்சாகம் குறையாமல் ஆட்டம் போட வைப்பது இவருக்கு கை வந்த கலை.
எந்த ஒரு மொழியில் பாடும்போதும், அந்த பாடலுக்கான பொருளை உணராமல், அதில் உள்ள உணர்ச்சியை வெளிப்படுத்த முடியாது என்பதால் அந்த மொழிகளை அறிந்து வைத்திருப்பார். அவருடைய குரல் கொஞ்சம் ஆண்மை கலந்ததாக இருப்பதாக பலரும் கூறுவதை பற்றி கவலைப்படாத அவர் அதுதான் இயற்கையானது என்றும் கூறியுள்ளார்.
இவரது கணவர் ஜானி உதூப், கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு இறந்தார். ஆனாலும் உஷா உதூப், தன்னுடைய தனித்துவ அடையாளமான பெரிய பொட்டு, தாலி போன்றவற்றுடன்தான் மேடைகளில் ஏறி பாடல்களைப் பாடி வருகிறார். கணவர் இறந்தது, அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பாக கருதுவதாகவும், எங்களுக்குள் இருந்த காதல் மற்றும் புரிதலை பல நேரங்களில் நினைத்துப் பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
"என் கணவர் என்னுடன் இல்லாத கடினமான சூழ்நிலை எனக்குமட்டும் தான் தெரியும். அதை மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் இந்து, என் கணவர் கிறிஸ்தவர் என்பதால் நான் அணிந்திருக்கும் தாலி, மலையாள கலாசாரத்தில், கிறிஸ்தவ தத்துவத்தையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ளதால், என் கணவர், இப்போதும் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன். என்னை இதுவரை வாழ வைத்துக்கொண்டிருப்பது இசைதான். மேடை, இசை, பாடல் ஆகியவை இல்லாவிட்டால், நான் ஜீரோ. அதனால் மேடை வாழ்க்கையும், குடும்பமும் எனக்கு முக்கியம். எப்போதும் என்னுடன் இருந்து வந்த ஒன்றை, சமூகத்திற்காக நான் இழக்க மாட்டேன். என் கணவரும் கூட அதை விரும்ப மாட்டார்” என்று கூறினார் உஷா உதூப்.