சத்திய சிவா இயக்கத்தில் சசிகுமார், ஹரிப்ரியா நடித்து வெளி வந்துள்ள படம் 'நான் மிருகமாய் மாற' படத்தின் டைட்டில் மற்றும் படத்தின் ஆரம்பத்தில் இது வன்முறையான படம் என்று கார்டு போடுவதால் நாம் வன்முறையை பார்க்க தயாராகிறோம். இருந்தாலும் அடுத்தடுத்து வரும் காட்சிகள் கண்கொண்டு காணமுடியவில்லை.
ஒரு பணக்கார பெரியவரை ஒரு கூலிப்படை கொலை செய்ய முயற்சிக்கிறது. ஹீரோவின் (சசிகுமார் ) தம்பி பெரியவரை காப்பாற்றி விடுகிறார். இதனால் கோபமடைந்த கூலிப்படை ஹீரோவின் தம்பியை கொலை செய்து விடுகிறது. அதன் பிறகு வழக்கம் போல் தான். ஹீரோ கூலிப்படையில் பலரை கொலை செய்கிறார்.
கூலிப்படை தலைவன் ஹீரோவின் குடும்பத்தை காலி செய்ய நினைக்கிறார். இறுதியில் வழக்கம் போல் தலைவனை தேடிப்பிடித்து கொலை செய்கிறார்.கொடூர கொலைகளும், பிணங்களுமாக ஒரு படத்தை தந்துள்ளார் சத்திய சிவா.
எந்த திருப்பங்களும் இல்லாமல் செல்கிறது படம். சசி குமார் இதே போல நடிப்பை பல படங்களில் தந்துள்ளதால் இதில் எதுவும் கவரவில்லை. ஹரிப்பிரியா வந்து போகிறார்.
சமூகத்தில் போற்றபட வேண்டியவர்களும், பேச பட வேண்டிய விஷயமும் பல இருக்க கூலிப்படை கதைகளம் எதற்கு? கழுகு என்ற சிறந்த படத்தை தந்து விட்டு இது போன்ற படம் எதற்கு சத்திய சிவா? நாடோடிகள், சுந்தர பண்டியன் போன்ற படங்களில் நடித்த சசியை மீண்டும் எதிர் பார்க்கிறோம்.