வணிகத் திரைப்படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்து வரும் நிலையில், சில எதார்த்தமான நல்ல படங்களும் அவ்வப்போது வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் நல்ல படங்களைப் பார்ப்பதற்கு நம்மிடம் பொறுமை இருக்க வேண்டும். இந்தப் பொறுமை இல்லாததால் தான் நல்ல படங்களை நாம் கொண்டாடத் தவறி விடுகிறோம். இந்த ஆண்டில் வெளியான திரைப்படங்களில் நாம் கொண்டாட வேண்டிய இரண்டு சிறப்பான திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
பான் இந்திய அளவில் வெளியாகும் திரைப்படங்கள் பலவும் வசூலை மட்டும் குறிவைத்து எடுக்கப்படுகின்றன. அப்படங்களில் இருக்கும் நல்ல கருத்துகளை அலசினால், பெரும்பாலும் ஒன்றுமே இருக்காது. அப்படியே இருந்தாலும் அவற்றை மக்கள் புரிந்து கொள்வதும் இல்லை. இதற்கிடையில் வந்த இடம் தெரியாமல் போய்விடுகின்றன சில நல்ல படங்கள். இந்தாண்டு தமிழில் வெளிவந்த கொட்டுக்காளி மற்றும் நந்தன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நல்ல கருத்துகளையே மக்களுக்கு சொல்லியது. இருப்பினும் இப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. ஏனெனில், இந்த இரண்டு படங்களிலும் திரைக்கதை மெதுவாகவே நகரும்.
இன்றைய காலத்து ரசிகர்கள் வேகமான திரைக்கதையுடன், கிராஃபிக்ஸ் காட்சிகளையே அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். இதனால் தான் இன்றைய எதார்த்தங்களை உணரத் தவறி விடுகின்றனர். கூழாங்கல் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் வினோத் ராஜ் தான் கொட்டுக்காளி படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே பல விருதுகளை வென்றிருந்தாலும், வணிக ரீதியாக தோல்வி அடைந்தன. கதையில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத இயக்குநர் வினோத் ராஜ், தொடர்ந்து இதுபோன்ற நல்ல படங்களை எடுப்பது உறுதி. ஆனால் அப்படங்களை ஆதரிக்க ரசிகர்கள் தயாரா என்பது கேள்விக்குறி தான்.
இரா.சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் நந்தன். சமூகத்தில் நலிவடைந்த மக்களின் அரசியல் உரிமைகளை எடுத்துரைக்கும் இந்தப் படம், எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக வசூலிக்கவில்லை. இருப்பினும் திரைக்கதையும், சசிகுமாரின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. நல்ல படங்கள் திரைக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், ரசிகர்களின் ஆதரவு கிடைக்காத காரணத்தாலும், இலாபம் கிடைக்காத காரணத்தாலும் யாருக்கும் தெரியாமலேயே போகின்றன.
நந்தன் மற்றும் கொட்டுக்காளி படங்களைப் பற்றி இயக்குநர் தங்கர் பச்சான் கூறுகையில், “தமிழ் சினிமாவில் களைகளுக்கு நடுவில் முளைத்த இரண்டு நற்பயிர்கள் இந்தப் படங்கள்” என்று புகழாரம் சூட்டினார். தமிழ் சினிமாவில், களைகளுக்கு நடுவில் பயிர்களை வளர விடப் போகிறார்களா அல்லது களைகளே இல்லாத பயிர்களை வளர்க்கப் போகிறார்களா என்பதை ரசிகர்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.
வணிக அளவில் பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்கள் மக்களின் ரசனையை வளர விடாமல் தடுத்து விட்டன. அதுமட்டுமின்றி இன்றைய தலைமுறை ரசிகர்களையும், மாஸ் நடிகர்களிடம் சிக்க வைத்து விட்டன. உழைத்து களைக்கும் மக்களுக்கு பொழுதுபோக்கு திரைப்படங்கள் தேவை தான். இருப்பினும் அவை மக்களுக்கு நல்ல கருத்துகளை சொல்பவையாக இருக்க வேண்டும்.