கீழ்த்தரமாக பேசிய மன்சூர் அலிகான்.. கொந்தளித்த தேசிய மகளிர் ஆணையம்!

கீழ்த்தரமாக பேசிய மன்சூர் அலிகான்.. கொந்தளித்த தேசிய மகளிர் ஆணையம்!

திரிஷா குறித்து கீழ்த்தரமாக பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலிகானின் இந்த வீடியோவை பார்த்த நடிகை த்ரிஷா, தனது எக்ஸ் தளத்தில், இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு நடிகர் மன்சூர் அலிகான் மெத்தனமாக இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்ற அளவில் விளக்கமளித்து பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த பலரும் மீண்டும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், திரிஷா குறித்து கீழ்த்தரமாக பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் நாங்கள் தாமாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிடுகிறோம்.

இதுபோன்ற கருத்துகள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக கருதத் தூண்டுகிறது. இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரம் குறித்து ட்வீட் செய்திருந்த நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தின் மேலதிகாரிகளுக்கு இந்த விஷயத்தை கொண்டு சென்றுவிட்டதாகவும், இது குறித்து மன்சூர் அலிகான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இதன் படி இன்று அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய மகளிர் ஆணையத்தின் இந்த பதிவை ஷேர் செய்த நடிகை திரிஷா நன்றி தெரிவிக்கும் குறியீட்டை பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com