விமர்சனம்: நீளிரா - இது கதையல்ல, வாழ்க்கை!

Neelira Movie
Neelira Movie
Published on
ரேட்டிங்(3.5 / 5)

இலங்கையின் யுத்த காலத்தில் நமது தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களை பற்றி சொன்ன படங்கள் தமிழ் சினிமாவில் இல்லை. முதல் முறையாக இலங்கை தமிழர் சோமிதரன் இயக்கத்தில் போர் காலத்தில் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக வந்துள்ளது நீளிரா.

இப்படத்தை டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். நடிகர் ராணா டகுபதி ரிலீஸ் செய்துள்ளார். நீளிரா என்றால் நீண்ட இரவு என்று பொருள்.

அது 1988 ஆம் ஆண்டு. இலங்கையில் அமைதியை நிலை நாட்ட இந்திய ராணுவம் தமிழர்கள் வாழும் பகுதியில் பணி செய்து கொண்டிருக்கிறது. ராணுவத்தின் கட்டு பாட்டிற்குள் உள்ள பகுதியில் ஒரு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு போராளிகள் தாக்க போவதாக இந்திய அமைதிப் படைக்கு (இந்திய ராணுவம்) தகவல் வருகிறது. தாக்க போகும் இடம் திருமணம் நடக்க இருக்கும் வீட்டிற்கு அருகில் உள்ளதாக தெரிய வருகிறது.

இந்திய ராணுவம் வீட்டை சுற்றி வளைக்கிறது. ஒரு கட்டத்தில் ராணுவம் வீட்டிற்குள் சென்று வீட்டையும், வீட்டில் இருப்பவரையும் தங்களது கட்டு பாட்டிற்குள் கொண்டு வருகிறது. வெளியே போர் சூழ்நிலை. வீட்டிற்குள் திருமண ஏற்பாடுகள். திருமணத்திற்கு முதல் நாள் நீண்ட இரவின் அனுபவத்தை சொல்கிறது நீளிரா.

இது ஒரு Survival Thriller வகை படத்தை சேர்ந்தது. பொதுவாக Survival Thriller படங்கள் என்றால் காட்டுகுள் சென்று மாட்டி கொள்வது, விலங்குகள், ரத்தம் குடிக்கும் மனிதர்களிடம் ஹீரோ, ஹீரோயின் மட்டும் தப்பித்து விடுவது என்று தான் இருக்கும். ஆனால் முதல் முறையாக ஒரு வீட்டுக்குள்ளேயே ஒரு Survival Thriller தர முடியும் என்று நிரூபித்து உள்ளார் சோமிதரன்.

ஒரு மணி முப்பது நிமிடம் உள்ள இந்த படம் ஒரு சிறு இடத்தில் கூட சலிப்பை தட்டவில்லை. போர் பற்றிய படம் என்றாலும் கூட வன்முறை காட்சிகள் இல்லை. ஆனால் வன்முறையின் வீரியம் எப்படி இருந்தது என்று சொல்ல பல காட்சிகள் உள்ளது.

உதாரணமாக ராணுவம் வீட்டின் கதவை தட்டும் போது, வீட்டில் உள்ள பெண்கள், வேகமாக உள்ளே சென்று தாங்கள் ஏற்கனவே அணிந்துள்ள சேலையின் மீது இரண்டு மூன்று சட்டைகள் அணிந்து கொள்ளும் காட்சி ராணுவம் நமது தமிழ் பெண்கள் மீது எந்த மாதிரியான வன்முறையை நிகழ்த்தி இருப்பார்கள் என்று புரிந்து கொள்ள வைக்கிறது.

வீட்டில் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் இயற்கை உபாதையை கழிக்க வீட்டுக்குக்குள் ஒரு கூடை சேரில் ஒரு கழிப்பறையை உருவாக்கும் காட்சி பார்வையாளர்களை கண் கலங்க வைத்து விடுகிறது.

வீட்டில் உள்ள பெரியவரும், ராணுவத்தினரும் பேசும் ஓரிடம் 1980 கால கட்டத்தின் இலங்கை, இந்திய அரசியலை புரிய வைக்கிறது. ரூபா கொடுவாயூர் கிளைமாக்ஸ் காட்சியில் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார். நவீன் சந்திரா, ஈழத்து கலைஞர்கள் கயல் வின்சென்ட், நமசிவாயம், நவயுகா என அனைவரும் ஆக சிறந்த நடிப்பை தந்துள்ளார்கள். எடிட்டிங், பின்னணி இசை இரண்டும் இரண்டு கண்கள் போல் இருந்து படத்தை தாங்கி பிடிக்கிறது.

ஹிட்லர் செய்த கொடுமைகளை மைய்யப்படுத்தி பல படங்கள் உலக அளவில் வந்துள்ளன. ஆனால் இலங்கை போரின் போது நமது தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்களை சொல்ல படம் எதுவும் இல்லை என்ற வருத்தத்தை போக்கி உள்ளது நீளிரா. இப்படி ஒரு சிறந்த படைப்பை தந்த சோமித்ரனை மனதார பாராட்டலாம்.

நீளிரா - இது கதையல்ல, சொல்லப்படாத நமது ஈழத் தமிழர்களின் கண்ணீர் வாழ்க்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com