ரஜினியை அடிக்க பாலிவுட்டில் இருந்து வில்லன் நடிகரை களமிறக்கிய நெல்சன்

‘ஜெயிலர்’ அப்டேட்...
ரஜினியை அடிக்க பாலிவுட்டில் இருந்து   வில்லன் நடிகரை களமிறக்கிய நெல்சன்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் கன்னடம், தெலுங்கு, மலையாளம் திரையுலகின் பிரபலங்கள் இணைந்துள்ளது தெரிந்த விஷயம்தான். ஆனால் இப்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் இணைந்துள்ளார் என்பது லேட்டஸ்ட் தகவல்.

இயக்குனர் நெல்சன் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். முதல் படமே ஹிட் ஆனதில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சன் பிக்சர்ஸ் தயாரித்து விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’  படத்தையும் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து  ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார்.   இப்படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது. அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் 75% படமாக்கப்பட்டு விட்டன.  இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் ஒரு சண்டைக் காட்சி ஆகியவை படமாக்கப்பட்டுவிட்டால் படம் முடிந்து அடுத்த கட்டத்துக்கு அதாவது போஸ்ட் புரடெஷன் பணிக்கு நகரும் என்று கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் (சிறப்பு தோற்றம்), ‘புஷ்பா’ பட புகழ் சுனில் ஆகியோர் நடிக்க உள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.

இதில் பாலிவுட் நடிகருக்கான இடம் மட்டும் காலியாக இருந்த நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கதாபாத்திரத்திற்கு முதலில் அமிதாப்பச்சனை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது ஜாக்கி ஷெராப் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜெயிலர் திரைப்படத்தில் தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் இருந்து முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ரஜினியின் ‘ஜெயிலர்’ அடையும் என தெரிகிறது.

இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேனும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com