தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பால் தனி முத்திரை பதித்து, தற்போது கதாநாயகனாகவும் கலக்கி வரும் நடிகர் சூரி, அடுத்ததாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அறிவிப்பு திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
'விடுதலை' திரைப்படம் மூலம் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக உருவெடுத்தார். அண்மையில் வெளியான 'கருடன்', 'மாமன்' போன்ற படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன. தொடர்ந்து கதையின் நாயகனாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சூரிக்கு, லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் நடிக்கவுள்ளது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கூலி' படத்திற்குப் பிறகு, அவர் 'கைதி 2' மற்றும் அமீர்கானுடன் ஒரு படத்தையும் இயக்கவுள்ளாராம். இவற்றுக்கிடையில், சூரி நடிக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கவிருப்பது, அவரது LCU (லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்) விற்கு வெளியே உருவாகும் ஒரு படமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய படத்தை மலையாள சினிமாவின் பிரபல இயக்குனரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி 'அங்கமாலி டயரிஸ்', 'ஜல்லிக்கட்டு', 'நண்பகல் நேரத்து மயக்கம்' போன்ற வித்தியாசமான மற்றும் விருது வென்ற படங்களை இயக்கியவர். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, லோகேஷ் கனகராஜ் மற்றும் சூரி ஆகிய மூவரின் கூட்டணி, சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
சூரியின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பாராத கூட்டணி, தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொண்டு வரும் என திரை விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.