மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து, ரசிகர்களை நடிப்பால், 'இவங்க நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்காங்க' என்று சொல்லவைத்த ஹீரோயின்கள் பலர் இருக்கிறார்கள். இதற்கு ரேவதி, ஊர்வசி, நயன்தாரா என பல உதாரணங்களைச் சொல்லலாம். இந்த லிஸ்ட்டில் சமீப காலமாக சேர்ந்திருப்பவர் நிகிலா விமல்.
மலையாளத்தில் இருபது படங்களுக்கு மேல் நடித்துள்ள நிகிலாவின் திறமையை தமிழில், ‘வெற்றி வேல்’ படம் மூலம் வெளிப்படுத்த வைத்தார் சசிகுமார். ‘வெற்றி வேல்’ படத்தில் திருமணம் நின்றுபோன ஒரு பெண்ணின் சோகத்தை கண்ணில் காட்டியவர், சென்ற ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற, ‘போர் தொழில்’ படத்தில் ஒரு க்யூட் பெண்ணாக நடித்தார். இந்த ஆண்டு நிகிலா நடித்து மலையாளத்தில் வெளியான, ' குருவாயூர் அம்பல நடையில்' கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்போது நிகிலா, இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆசிரியையாகி விட்டார்.
ஆம், சமூகத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தை, ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ படங்களில் சொன்னவர், தற்போது ‘வாழை’ என்ற படத்தை இயக்கி உள்ளார். கிராமத்தில் படிக்கும் தன்னை பாதித்த ஒரு ஆசிரியையை மையப்படுத்தி ‘வாழை’ படத்தை இயக்கி உள்ளார். இந்த ஆசிரியை கேரக்டரில் நிகிலா விமல் நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையில், மீனாட்சி குரலில், 'தென்கிழக்கு' எனத் தொடங்கும் ‘வாழை’ படத்தின் முதல் பாடல் வெளியானது. பாடல் காட்சியில் திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு கிராமத்து ஆசிரியையை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். மாணவனுக்கும், ஒரு ஆசிரியைக்கும் உள்ள நட்பு இந்தப் படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "நான் பார்த்து உணர்ந்த பள்ளிப் பருவத்தை ‘வாழை’ படத்தில் சொல்லி இருக்கிறேன். என் டீச்சர் கேரக்டருக்கு என் கண் முன் வந்தது நிகிலாதான். முதலில் தயங்கியவர், பின்பு நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த ஒரு பாடலிலேயே நிகிலாவின் உணர்வுகளை பார்த்துப் பாராட்டியவர்கள் முழு படத்தையும் பார்த்த பின்பு இன்னும் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். இதுவரை நான் இயக்கிய படங்களில் என்னை பாதித்த விஷயங்களைத் தந்திருக்கிறேன். ஆனால், ‘வாழை’ என் வாழ்க்கை" என்றார்.
"ஒருவர் தனது வாழ்க்கையில் நேசித்த கேரக்டரில் நான் நடிக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சியான விஷயம். ஒரு லைவ் கேரக்டரில் நடிப்பது எனக்கு முதல் முறை. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மாரி செல்வராஜின் கிராமத்தில் படமாக்கப்பட்டது. அந்த கிராமத்து மக்கள் மிக அதிக அளவு அவரை நேசிக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்" என்று உணர்வு பொங்க சொல்கிறார் நிகிலா விமல்.
மண் மணம் சார்ந்த படங்களில் நடிக்கும் ஹீரோயின்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். நம்ம வீட்டுப் பெண் போல் இருக்கும் நிகிலாவும் இந்த லிஸ்ட்டில் இடம் பெறுவார் என்று நம்புவோம்.